நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வேட்பாளர்களின் அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்தது
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வேட்பாளர்களின் அனல் பறக்கும் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இதையடுத்து 715 வாக்குச்சாவடிகளில் நாளை (சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளில் 447 பதவிகளில், 10 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதனால் தற்போது 437 பதவிகளுக்கான தேர்தல் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.
இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியுடனும், அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தனித்தும் போட்டியிடுகிறது. தே.மு.தி.க. சில இடங்களில் தனித்தும், சில இடங்களில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தும் தேர்தலை சந்திக்கிறது.
பிரசாரம்
மாவட்டத்தில் சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 1,994 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதனால் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தனர்.
மேலும் வீடு, வீடாக சென்று தங்கள் ஆதரவாளர்களுடன் தாங்கள் போட்டியிடும் சின்னத்திற்கு வாக்கு கேட்டனர். பொதுமக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசினர். அதேவேளை கட்சி சார்பில் சீட் கேட்டு கிடைக்காத தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் சுயேச்சையாகவும் போட்டியிட்டுள்ளனர். அவர்களும் தங்கள் வார்டில் போட்டி வேட்பாளர்களாக மாறி பொதுமக்களை திரட்டி ஆதரவு கேட்டனர்.
ஓய்ந்தது
இந்நிலையில் நேற்று இறுதிகட்ட பிரசாரத்தில் அனைத்து வேட்பாளர்களும் ஈடுபட்டனர். இதனால் நேற்று தேர்தல் களம் பரபரப்பாக இருந்தது. அனைத்து வீதிகளிலும் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் திரண்டு சென்று வாக்கு சேகரித்து வந்ததால், மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் பூண்டது.
பட்டாசு வெடித்தும், மேள, தாளங்கள் முழங்க வேட்பாளர்கள் இறுதி கட்ட பிரசாரத்தை நேற்று மாலை 6 மணியுடன் நிறைவு செய்தனர். இதனால் கடந்த 2 வாரங்களாக பரபரப்புடன் இருந்த வேட்பாளர்கள் பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்தது.
இதையடுத்து வார்டுகளில் தங்கி இருந்த வெளி ஆட்கள், குறிப்பாக அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு இருந்த பிற பகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து வாக்குப்பதிவு நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதில் 5 லட்சத்து 78 ஆயிரத்து 812 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 715 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
1,800 போலீசார் பாதுகாப்பு
இந்த வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள தேர்தல் அலுவலர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களால் பணி ஆணை வழங்கப்படுகிறது. பணி ஆணையை பெற்றதும், மண்டல அலுவலர்கள் கண்காணிப்பில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குச்சாவடிக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் வாக்குச்சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகிறது.
இதற்காக 57 நடமாடும் போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவினர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்வதில் இருந்து, வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லும் வரை பணியில் ஈடுபடுவார்கள். இது தவிர தேர்தலையொட்டி மாவட்டம் முழுவதும் 1,800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
Related Tags :
Next Story