தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் ராக்கிங் புகார்: விடுதி வார்டன்கள்-மாணவர்களிடம் மீண்டும் விசாரணை
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் எழுந்த ராக்கிங் புகார் குறித்து சம்பந்தப்பட்ட மாணவர்கள் மற்றும் விடுதி வார்டன்களிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது.
தர்மபுரி:
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் எழுந்த ராக்கிங் புகார் குறித்து சம்பந்தப்பட்ட மாணவர்கள் மற்றும் விடுதி வார்டன்களிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது.
ராக்கிங் புகார்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த 19 வயது மாணவர் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். இவர் கடந்த டிசம்பர் மாதம் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை தின்று கல்லூரி விடுதியில் தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. ராக்கிங் பிரச்சினை காரணமாக அவர் அதிக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. மாணவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் அமுதவல்லி தலைமையில் ராக்கிங் தடுப்பு குழுவினர் விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து புகாருக்கு உள்ளான 4 மாணவர்களும் கல்லூரியில் இருந்து ஒரு வாரம் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
கல்லூரி விடுதியில் இருந்து நிரந்தரமாக அவர்களை வெளியேற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் தர்மபுரி டவுன் போலீசார் ராக்கிங் தடுப்பு தொடர்பான சட்டப்பிரிவுகளின் கீழ் சம்பந்தப்பட்ட 4 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
மீண்டும் விசாரணை
இந்த நிலையில் ராக்கிங் சம்பவம் தொடர்பாக மருத்துவக்கல்லூரி இயக்குனரகத்தின் உத்தரவின்பேரில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் அசோகன், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் நேரில் விசாரணை நடத்தினார். அப்போது ராக்கிங் புகாருக்குள்ளான மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.இதேபோல் அரசு மருத்துவக்கல்லூரி விடுதி வார்டன்கள், ராக்கிங் புகார் தெரிவித்த மாணவர் ஆகியோரிடமும் அவர் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவர் அறிக்கை தயாரித்து மருத்துவக்கல்லூரி இயக்குனரகத்திற்கு அனுப்புவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story