விருத்தாசலத்தில் பஸ் மோதி நர்சிங் மாணவி உள்பட 2 பேர் பலி


விருத்தாசலத்தில் பஸ் மோதி நர்சிங் மாணவி உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 17 Feb 2022 10:48 PM IST (Updated: 17 Feb 2022 10:48 PM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் பஸ் மோதி நர்சிங் மாணவி உள்பட 2 பேர் உயிாிழந்தனர். அப்போது பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருத்தாசலம்,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் டிரைவர் குடியிருப்பை சேர்ந்தவர் ஹரி(வயது 21). இவர் நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் விருத்தாசலத்தில் இருந்து சித்தலூர் நோக்கி புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடன் விருத்தாசலம் ராமச்சந்திரன் பேட்டையை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவியான மணிகண்டன் மகள் கவிதா(20) என்பவர் ‘லிப்டு’ கேட்டு சென்றுள்ளார். அந்த சமயத்தில் விருத்தாசலம் புறவழிச்சாலையில் தனியார் பள்ளி அருகே சாவடிக்குப்பத்தை சேர்ந்த ரத்தினம் மனைவி சிந்தாமணி(65), சுமதி ஆகியோர் ஆடுகளை ஓட்டிக்கொண்டு சாலையை கடக்க முயன்றனர். 

பஸ் மோதியது

அப்போது அங்கு வந்த ஹரி, ஆடுகள் சாலையை கடக்க முயன்றதை பார்த்ததும், மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அந்த சமயத்தில் பின்னால் விருத்தாசலத்தில் இருந்து ஓலையூர் நோக்கி வந்த அரசு பஸ் ஒன்று, ஹரி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு சாலையை கடந்து கொண்டிருந்த ஆடுகள் மீதும், சிந்தாமணி, சுமதி ஆகியோர் மீதும் மோதியது. 
இதில் பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியதில் சிந்தாமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த கவிதாவும் அதே இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 3 ஆடுகளும் செத்தன.

ஹரி, சுமதி ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் பலியான 2 பெண்களின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

பொதுமக்கள் போராட்டம்

இதற்கிடையே விபத்து பற்றி அறிந்த சித்தலூர் பகுதி மக்கள் அங்கு திரண்டு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், விருத்தாசலம் கடைவீதியில் இருந்து பெண்ணாடம் செல்லும் தெற்கு தெரு சாலை அமைக்கும் பணிக்காக போக்குவரத்து மாற்றி விடப்பட்டதால் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக பொன்னேரி, சித்தலூர் புறவழிச்சாலை வழியாக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்தை மாற்றி விட்டதால் தான் இதுபோன்ற விபத்துகள் நடக்கிறது. எனவே மீண்டும் வழக்கமான பாதையிலேயே போக்குவரத்தை இயக்க வேண்டும் எனக்கூறி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

இதையடுத்து விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித் ஜெயின் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
மேலும் இந்த விபத்து குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story