வயலில் கச்சா எண்ணெய் படலம்
கொரடாச்சேரி அருகே வயலில் கச்சா எண்ணெய் படலம் காணப்பட்டது. அங்கு பதிக்கப்பட்டுள்ள ஓ.என்.ஜி.சி. குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
கொரடாச்சேரி:-
கொரடாச்சேரி அருகே வயலில் கச்சா எண்ணெய் படலம் காணப்பட்டது. அங்கு பதிக்கப்பட்டுள்ள ஓ.என்.ஜி.சி. குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
ஓ.என்.ஜி.சி. குழாய்
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள எருக்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். அந்த பகுதியில் உள்ள இவருடைய வயலுக்கு அடியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் கச்சா எண்ணெய் குழாய் பதிக்கப்பட்டு உள்ளது. இந்த வயலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறுவடை பணிகள் நடந்தது.
இந்த நிலையில் நேற்று காலை நடராஜன் தனது வயலுக்கு சென்று பார்த்தபோது வயலில் கச்சா எண்ணெய் படலம் காணப்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடராஜன், உடனடியாக வருவாய்த்துறை மற்றும் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
அதிகாரிகள் ஆய்வு
தகவலின்பேரில் வெள்ளக்குடி ஓ.என்.ஜி.சி. தலைமை பொறியாளர் மாரிநாதன் தனது குழுவினருடன் அங்கு நேரில் சென்று கச்சா எண்ணெய் படலம் காணப்பட்ட வயலை ஆய்வு செய்தார். அதேபோல் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அழகிரிசாமி மற்றும் அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில் ஈடுபட்ட ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் கூறுகையில், ‘கச்சா எண்ணெய் குழாய் உடைந்திருந்தால் தொடர்ந்து கச்சா எண்ணெய் வெளியேறிக்கொண்டே இருக்கும். ஆனால் அதுபோல் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட பரப்பளவில் எண்ணெய் படலம் பரவி உள்ளது. வயலில் கச்சா எண்ணெய் படலம் எதனால் பரவியது? என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்படும். வயலில் படர்ந்திருந்த எண்ணெய் படலத்தின் மாதிரி ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஆய்வு முடிவின்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என்றனர்.
வருவாய்த்துறையினர் விசாரணை
ஓ.என்.ஜி.சி. எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் வயலில் கச்சா எண்ணெய் படலம் பரவியதா? அல்லது வேறு காரணங்கள் உள்ளதா? என்பது குறித்து ஓ.என்.ஜி.சி. அதிகாரிகளுடன், வருவாய்த்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். வயலில் ஓ.என்.ஜி.சி. குழாய் உடைந்து கச்சா எண்ணெய் வெளியேறியதாக தகவல் பரவியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story