2 பேரை பிடித்து பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த மனிதநேய மக்கள் கட்சியினர்
திருவாரூரில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக கூறி 2 பேரை பிடித்து மனித நேய மக்கள் கட்சியினர் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர்:-
திருவாரூரில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக கூறி 2 பேரை பிடித்து மனித நேய மக்கள் கட்சியினர் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பணம் பட்டுவாடா
திருவாரூர் நகராட்சி 5-வது வார்டில் தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ. மற்றும் சுயேச்சை வேட்பாளர் உள்பட 4 பேர் போட்டியிடுகிறார்கள். நேற்று மாலை இறுதி கட்ட பிரசாரம் நடைபெற்றது. அப்போது 2 பேர் அந்த பகுதியில் வீடு, வீடாக சென்று ஒரு கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக கூறி மனிதநேய மக்கள் கட்சியினர் அவர்களை பிடித்து தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரூ.45,300-ஐ பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி மனிதநேய மக்கள் கட்சியினர் திடீரென கேக்கரை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மறியல் காரணமாக அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விசாரணை
இதனையடுத்து பறக்கும் படையினர் இருவரையும் பணத்துடன் திருவாரூர் நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபாகரனிடம் ஒப்படைத்தனர். அவர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதேபோல் திருவாரூர் 3-வது வார்டிலும் ஒரு கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கூறி தே.மு.தி.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் புதுத்தெரு மயிலாடுதுறை சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story