காரைக்குடி-திருச்சி இடையே மின்சார ரெயில் சோதனை ஓட்டம்


காரைக்குடி-திருச்சி இடையே மின்சார ரெயில் சோதனை ஓட்டம்
x
தினத்தந்தி 17 Feb 2022 11:22 PM IST (Updated: 17 Feb 2022 11:22 PM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி-திருச்சி இடையே புதிதாக அமைக்கப்பட்ட மின்தடத்தில் நேற்று மின்சார ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதனை ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்தார்.

காரைக்குடி, 

காரைக்குடி-திருச்சி இடையே புதிதாக அமைக்கப்பட்ட மின்தடத்தில் நேற்று மின்சார ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதனை ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்தார்.

சோதனை ஓட்டம்

திருச்சி முதல் மானாமதுரை வரை ரெயில்வே பாதையை மின்வழித்தடமாக மாற்றும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. 
இதில் திருச்சியில் இருந்து காரைக்குடி வரை 89 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்பட்ட மின்வழித்தடத்தில் நேற்று மின்சார என்ஜின் பொருத்திய ரெயில் மூலம் சோதனை ஓட்டம் நடைபெற்றது. 
திருச்சியில் இருந்து டீசல் என்ஜின் மூலம் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார்ராய் தலைமையில் நேற்று மாலை 3 மணிக்கு காரைக்குடி வந்த ரெயில்வே அதிகாரிகள் அதன் பின்னர் காரைக்குடியில் நிறுத்தி வைக்கப்பட்ட மின்சார என்ஜினை அந்த ரெயிலுடன் பொருத்தினர். 
முன்னதாக காரைக்குடி ரெயில்வே நிலையத்திற்கு வந்த ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ரெயில் நிலையத்தை ஆய்வு செய்து பின்னர் அங்குள்ள ரெயில்வே பணியாளர்கள் பயன்படுத்தும் உபகரண பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து ரெயில்வே நிலையத்தில் உள்ள மின்வழித்தடத்தையும் ஆய்வு செய்தார்.

மார்ச் முதல் வாரத்தில் தொடக்கம்

அதன் பின்னர் மாலை 3.30 மணிக்கு மின்சார ரெயில் என்ஜின் பொருத்தப்பட்ட ரெயிலை புதிய மின் வழித்தடத்தில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த ரெயில் இடையில் உள்ள ரெயில்வே கேட் பகுதி, மின்மாற்றி இடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிறுத்தி ஆய்வு செய்தனர். 
இந்த ஆய்வின்போது மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் ஆனந்த், ரெயில்வே முதுநிலை இயக்க மேலாளர் ரதிபிரியா, கோட்ட வணிக மேலாளர் கணேஷ் மற்றும் ரெயில்வே மின்வழித்தட தொழில் நுட்ப மேலாளர்கள், ஊழியர்கள் உடனிருந்தனர். முன்னதாக காரைக்குடிக்கு வந்த ரெயில்வே பாதுகாப்பு ஆணையரை காரைக்குடி தொழில் வணிககழகதலைவர் சாமி திராவிட மணி மற்றும் செயலாளர் எஸ்.கண்ணப்பன் ஆகியோர் வரவேற்றனர். இந்த மின்சார ரெயில் சோதனை ஓட்டம் நிறைவு பெற்றதும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து காரைக்குடியில் இருந்து திருச்சி வரையிலான மின்வழித்தடத்தில் ரெயில்கள் இயங்கும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story