நகர்ப்புற உள்ளாட்சியிலும் நல்லாட்சி தொடர திமுக வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்


நகர்ப்புற உள்ளாட்சியிலும் நல்லாட்சி தொடர திமுக வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 17 Feb 2022 11:24 PM IST (Updated: 17 Feb 2022 11:24 PM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி யிலும் நல்லாட்சி தொடர தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கோவை பிரசார கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

கோவை

நகர்ப்புற உள்ளாட்சி யிலும் நல்லாட்சி தொடர தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கோவை பிரசார கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

கோவை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்க ளை ஆதரித்து தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிரசாரம் செய்தார். கோவை சுந்தராபுரம் பகுதியில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
கொரோனாவை தடுக்க எல்லோரும் தடுப்பூசி போட்டீர்களா?. 2 தவணை தடுப்பூசி போட்டாலே போதுமானது. இங்கு திரண்டு இருக்கும் கூட்டத்தை பார்க்கும் போது கண்டிப்பாக தி.மு.க. கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுப்பீர்கள் என தெரிகிறது. கோவை மாவட்ட மக்களை நம்பவில்லை. கடந்த முறை நான் பிரசாரத்துக்கு இங்கு வந்தபோது வாக்களித்து வெற்றி பெற செய்வோம் என சொன்னீர்கள்? செஞ்சீங்களா?.

10 கோடி தடுப்பூசி

தமிழகம் முழுவதும் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்ற போதும் கோவை மாவட்ட மக்கள் ஏமாத்திட்டீங்க. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சொன்னதை செய்துள்ளார். அ.தி.மு.க ஆட்சியில் வீட்டில் மக்களை முடக்கியது தான் சாதனை. ஆனால் உயிரிழப்புகளை தடுக்க 10 கோடி தடுப்பூசிகளை போட்டது தி.மு.க. அரசு தான். அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு கோடி தடுப்பூசி தான் போட்டார்கள். இது போன்று மக்களுக்காக செயல்படுவதால், இந்தியாவின் நம்பர் ஒன் முதல் -அமைச்சர்  ஸ்டாலின் தான் என கூறுகிறார்கள்.
பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை
அ.தி.மு.க ஆட்சி முடிந்த போது ரூ.6 லட்சம் கோடி கடனை வைத்து சென்றனர். ஆனாலும் தி.மு.க ஆட்சி அமைந்த உடன் பால் விலை குறைப்பு, பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. நிதிநிலை சரி செய்யப்பட்டு விரைவில் பெண்களுக்கு மாதாமாதம் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கும் திட்டம் தொடங்கப்படும்.தமிழகத்தில் ஒரு போதும் பா.ஜ.க. காலூன்ற முடியாது என ராகுல் காந்தி மோடிக்கு சவால் விட்டுள்ளார். இதற்கு காரணம் அ.தி.மு.க. வுக்கும், பா.ஜ.கவுக்கும் சிம்ம சொப்பனமாக ஸ்டாலின் விளங்குகிறார். இந்த முறை கோவை மாவட்ட மக்கள் தி.மு.க.வுக்கு வெற்றி தருவார்கள் என நம்பலாமா?. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் நல்லாட்சி தொடர தி.மு.க கூட்டணிக்கு அமோக வெற்றி தருவீர்கள் என்று நம்புகிறேன்.

2 அமாவாசை

ஊழல்மணிக்கு சாவுமணி அடிப்பது நிச்சயம். ஏற்கனவே அவரது ரூ.110 கோடி முடக்கப்பட்டு உள்ளது. வெள்ளலூர் குப்பைக்கிடங்கு இடம் மாற்றப்படுவதுடன் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்படும். இன்னும் 27 அமாவாசை தான் தி.மு.க ஆட்சி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். ஆனால் தமிழகத்தில் உள்ள 2 அமாவாசைகள் யார்? என்பது உங்களுக்கு தெரியும். ஒன்று எடப்பாடி பழனிசாமி, மற்றொருவர் ஓ.பன்னீர்செல்வம். இருவரையும் அனுப்பிவிட்டீர்கள், ஆனால் ஓட ஓட விரட்ட வேண்டும் என்பதற்காக தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர் வடவள்ளி. செல்வபுரம், கவுண்டம்பாளையம், சூலூர், ஆரோக்கியசாமி திடல் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்து விட்டு விட்டு ராஜவீதியில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.

பொள்ளாச்சி

முன்னதாக பொள்ளாச்சி நகராட்சி, ஜமீன்ஊத்துக்குளி, சூளேஸ்வரன் பட்டி பேரூராட்சிகளில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பொள்ளாச்சி பல்லடம் ரோட்டில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- 
நான் செல்லும் இடங்களில் எல்லாம் ஆண்களை விட பெண்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. அதற்கு காரணம் போட்டியிடும் வேட்பாளர்களில் 50 சதவீதம் பெண்கள் என்பது எனக்கு தெரியும். பெண்கள் ஒரு முடிவு எடுத்து வீட்டீர்கள் என்றால் யார் சொன்னாலும் கேட்க மாட்டார்கள். இந்த முறை நீங்கள் முடிவு எடுத்து விட்டீர்கள் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

பஸ்சில் பெண்கள் இலவச பயணம் 

தேர்தல் வாக்குறுதியின்படி கொரோனா நிவாரண நிதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு குறைப்பு, பெண்கள் பஸ்சில் இலவச பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. பொள்ளாச்சி எம்.எல்.ஏ. சட்டமன்றத்திற்கு வரவில்லை. தொகுதிக்கும் வரவில்லை. பொள்ளாச்சி அ.தி.மு.க.வின் கோட்டை என்று அவர் கூறியிருக்கிறார். அதை உள்ளாட்சி தேர்தலில் உடைத்து தி.மு.க.வின் கோட்டை என்று நிரூபித்து காட்டுவோம். உள்ளாட்சியிலும் நல்லாட்சி தொடருவதற்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரசாரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி, கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story