நாமக்கல் மாவட்டம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மாலையுடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் ஓய்ந்ததை தொடர்ந்து, வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மாலையுடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் ஓய்ந்ததை தொடர்ந்து, வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
439 வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல்
நாமக்கல் மாவட்டத்தில் 153 நகராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் 294 பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 447 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 2 நகராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் 6 பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 8 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 439 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 1,748 பேர் போட்டியிடுகின்றனர். இதற்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் சுமார் 5½ லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக மாவட்டத்தில் 679 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளுக்கு அருகே 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் கோடு வரையும் பணியில் நேற்று உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு பணி
நாமக்கல் மாவட்டம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணியில் போலீசார், ஊர்க்காவல் படையினர் என சுமார் 1,400 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கு நேற்று நாமக்கல் ஆயுதப்படை வளாகத்தில் பணிநியமன உத்தரவு வழங்கப்பட்டது. இதேபோல் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள சுமார் 120 சரக்கு வாகனங்களும் அங்கு வரவழைக்கப்பட்டு இருந்தன.
இந்த வாகனங்களில் போலீசார் நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களுக்கு நேற்று இரவு சென்றனர். அங்கு இன்று (வெள்ளிக்கிழமை) மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களை ஏற்றிக்கொண்டு வாக்குச்சாவடிகளுக்கு செல்ல உள்ளனர். பின்னர் அங்கு வாக்குப்பதிவுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்வார்கள்.
பிரசாரம் ஓய்ந்தது
இதற்கிடையே கடந்த வாரத்திற்கு மேலாக மாவட்டம் முழுவதும் அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர். கடைசி நாளான நேற்றும் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்தது. சரியாக மாலை 6 மணிக்கு தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் 2-ம் கட்ட தலைவர்கள் சிலரே தேர்தல் பிரசாரம் செய்தனர். முக்கிய பிரமுகர்கள் யாரும் பிரசாரத்திற்கு வராததால் வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
Related Tags :
Next Story