குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் தர்ணா போராட்டம்


குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் தர்ணா போராட்டம்
x

தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாரமங்கலம்:-
தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிநீர் வழங்கவில்லை
தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம் துட்டம்பட்டி ஊராட்சி 9-வது வார்டு மேல் காட்டுவளவு பகுதியில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு போதிய அளவு குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து ஊராட்சி மன்ற நிர்வாகத்தினரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.
இதனால் அன்றாட தேவைகளுக்கு கூட குடிநீர் கிடைக்காமல், பொதுமக்கள் தண்ணீரை காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சிலர் அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று குடிநீரை எடுத்து வந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்துள்ளனர்.
தர்ணா போராட்டம்
இந்த நிலையில் ேநற்று காலை குடிநீர் வழங்க கோரி மேல் காட்டுவளவு பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் ஒன்றிய அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் குடிநீர் வழங்க கோரியும், அதற்கு நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினார்கள்.
இதனிடையே ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் கருணாநிதி, அனுராதா ஆகியோர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களை அலுவலகத்துக்குள் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அங்கு தாரமங்கலம் போலீசாரும் வந்தனர். 
பேச்சுவார்த்தை
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் ஒன்றிய ஆணையாளர்கள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்து தருகிறோம் என்று உறுதி கூறினர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

Next Story