மின்னணு எந்திரங்களை பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்
வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு எந்திரங்களை பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகளுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை கூறியுள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட தேர்தல் பார்வையாளர் லட்சுமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் மோகன் கூறியதாவது:- விழுப்புரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 346 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், விரல் மை, படிவங்கள் ஆகியவற்றை பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டும். வாக்குச்சாவடி மையங்களில் 64 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடி மையங்களில் வெப் கேமரா மூலம் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள்
மேலும் வாக்குச்சாவடி மையங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முககவசம், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கை கழுவும் திரவம் கொண்டு கைகளை சுத்தப்படுத்துவது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதை வாக்குச்சாவடி அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். மாநில தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை வாக்குப்பதிவு நாளன்று ஜனநாயக முறைப்படி வாக்குப்பதிவு பணிகளை மேற்கொள்ள வேண்டும். வாக்குப்பதிவு நிறைவுற்ற பின்பு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தேர்தல் முகவர்கள் முன்னிலையில் சீலிட்டு உரிய பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லும் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மகளிர் திட்ட அலுவலர் காஞ்சனா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து வளவனூர் பேரூராட்சி வாக்கு எண்ணும் மையத்திலும், கோட்டக்குப்பம் நகராட்சி வாக்கு எண்ணும் மையத்திலும் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Related Tags :
Next Story