அனல்பறக்கும் பிரசாரம் ஓய்ந்தது
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனல்பறக்கும் பிரசாரம் ஓய்ந்தது. நாளை (சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
புதுக்கோட்டை,
உள்ளாட்சி தேர்தல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய நகராட்சிகள் மற்றும் அரிமளம், அன்னவாசல், கீரனூர், இலுப்பூர், கீரமங்கலம், ஆலங்குடி, கறம்பக்குடி, பொன்னமராவதி ஆகிய 8 பேரூராட்சிகளில் வார்டு கவுன்சிலர்கள் பதவிக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது.
பிரசாரம் ஓய்ந்தது
அதை தொடர்ந்து நேற்று காலை முதல் வேட்பாளர்கள் அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட ஜீப், ஆட்டோ போன்றவற்றில் பிரசாரம் செய்தனர். மோட்டார் சைக்கிளில் தங்களது ஆதரவாளர்களுடன் கொடியை ஏந்தியும், தங்களது சின்னத்தை கையில் ஏந்தியவாறு வீடு வீடாக நடந்து சென்று வாக்கு சேகரித்தனர். ஒருசில வேட்பாளர்கள் பேண்டு, வாத்தியம் மற்றும் தாரை தப்பட்டை முழங்க ஓட்டு கேட்டனர்.
மேலும் தங்களின் சின்னத்தை தெருவில் உள்ள மரங்களில் தொங்கவிட்டிருந்தனர். சில வார்டுகளில் ஒரே இடத்தில் பல வேட்பாளர்கள் சந்தித்து வாக்கு கேட்டனர். காலையில் எங்கு பார்த்தாலும் ஒலிபெருக்கி சத்தம் கேட்டவண்ணம் இருந்த நிலையில் மாலை 6 மணிக்கு பிரசாரம் ஓய்ந்து அமைதியாக காணப்பட்டது. இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான நேற்று ஒரே நேரத்தில் வேட்பாளர்கள் திரண்டதால் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.
மஞ்சப்பையை அகற்ற எதிர்ப்பு
பெரியார் நகர் பகுதியில் மரங்களில் ஏராளமான மஞ்சப்பை தொங்கவிடப்பட்டிருந்தன. இது வேட்பாளரின் கைப்பை சின்னத்தை குறிக்கும் வகையில் இருப்பதாகவும், அதனை அகற்றுவதற்காக நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் நேற்று மாலை அங்கு வந்தனர். அப்போது வேட்பாளரின் தரப்பில் இருந்து பொதுவான மஞ்சப்பை குறித்துதான் பை தொங்கவிடப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். மேலும் மற்ற அரசியல் கட்சியினரின் சின்னங்கள் தொங்கவிடப்பட்டு இருப்பதாகவும் அதனை அகற்றுமாறும் கூறினர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர். மஞ்சப்பை மரத்தில் தொங்கிய நிலையிலேயே காணப்பட்டது. நாளை (சனிக்கிழமை) காலை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குச்சாவடி மையங்களில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
கறம்பக்குடி
கறம்பக்குடி பேரூராட்சி பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். தி.மு.க.வினர் அனைத்து வார்டுகளிலும் மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரித்தனர். மாலையில் சினி கடைமுக்கம் பகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்தனர். இதேபோல் அனைத்து கட்சிகளின் சார்பிலும் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் பிரசாரம் நடைபெற்றது. கிராம பகுதிகளில் இருந்தும் அரசியல் கட்சியினர் திரண்டு வந்து இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனால் கறம்பக்குடியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. கடந்த 15 நாட்களாக நடைபெற்று வந்த பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது.
Related Tags :
Next Story