ரூ.5 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்
காட்டுப்பகுதியில் அனுமதியின்றி தயாரித்த ரூ.5 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்
தாயில்பட்டி
வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வருவாய் துறையினரும், போலீசாரும் இதுவரை வெற்றிலையூரணி, கீழதாயில்பட்டி, சல்வார்பட்டி, கோட்டையூர், தாயில்பட்டி, கலைஞர் காலனி, விஜயகரிசல்குளம், கோதை நாச்சியார்புரம் பகுதியில் இதுவரை 15 பேர் கைது செய்துள்ளனர். ரூ. 6 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது நடவடிக்கை ஈடுபட்டாலும் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணி தங்குதடையில்லாமல் நடைபெற்று வருகிறது.
சுப்ரீம் கோர்ட்டால் சரவெடிகள் தயாரிப்பதற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதால் பல பட்டாசு ஆலைகள் சரவெடிகளுக்கு பதிலாக மற்றவெடிகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் துலுக்கன்குறிச்சி காட்டுப்பகுதியில் விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்த காளிராஜ் (வயது 41) தகர செட் அமைத்து சர வெடிகளை தயார் செய்வதாக கிராம நிர்வாக அலுவலர் அருண் கொடுத்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை தாசில்தார் சுந்தரமூர்த்தி, இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் ஆகியோர் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு சுமார் 40 பெட்டிகளில் தயார் செய்து வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான வெடிகளை பறிமுதல் செய்தனர். மேலும் காளி ராஜ் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் தீபாவளி சீசனில் விற்பனையாகாத பட்டாசுகள் மற்றும் தற்போது தயார் செய்யப்பட்ட பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story