2 வீடுகளில் நகை- பணம் திருட்டு
நெல்லையில் 2 வீடுகளில் நகை- பணம் திருட்டு
நெல்லை:
பாளையங்கோட்டை சமாதானபுரம் சத்யா தெருவை சேர்ந்தவர் ஜோசப்செல்வன் (வயது 37). இவர் மும்பையில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். தற்போது சொந்த ஊருக்கு வந்துள்ள ஜோசப்செல்வன் தனது பழைய வீட்டை புதுப்பித்து வருகிறார். இதற்காக வீட்டில் ஒரு அறையில் பொருட்களை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அந்த அறையை பூட்டிவிட்டு பக்கத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு தூங்கச் சென்றார். பின்னர் நேற்று காலை வந்து பார்த்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதில் அதிர்ச்சி அடைந்த ஜோசப் செல்வன் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 7 பவுன் நகை திருட்டுப்போனது தெரியவந்தது. யாரோ மர்ம நபர்கள் நகையை திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
நெல்லை அருகே கொங்கந்தான்பாறை பாலாஜி நகரை சேர்ந்தவர் அசரியா ராஜேந்திரன் (62). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார். பின்னர் மாலை மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த அசரியா ராஜேந்திரன் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 1½ பவுன் நகை, ஒரு கைக்கெடிகாரம், ரூ.3 ஆயிரம் ஆகியவை திருட்டுப்போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story