ஹிஜாப் அணிந்த மாணவியை கல்லூரிக்கு அழைத்து சென்ற இந்து மாணவிகள்
உடுப்பியில் ஹிஜாப் அணிந்த மாணவியை கல்லூரிக்கு இந்து மாணவிகள் அழைத்து சென்றனர்.
பெங்களூரு: கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு பள்ளி, கல்லூரிகளில் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஹிஜாப் விவகாரத்தால் மத ரீதியாக மாணவர்கள் மனதில் விஷ விதைகளை தூவப்படுவதாக அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால் மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்தினாலும், பல இந்து-முஸ்லிம் மாணவ, மாணவிகள் தங்களை மதங்களை காட்டி பிரிக்க முடியாது என்பது போல ஒற்றுமையாக இருந்து வருகிறார்கள். இதற்கு எடுத்துகாட்டாக நேற்று முன்தினம் உடுப்பியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது, ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவியை, இந்து மாணவிகள் 4 பேர் கையை பிடித்து கல்லூரிக்கு அழைத்து சென்றனர். இந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் ‘இது தான் இந்தியா’ என்று ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், முஸ்லிம் மாணவியை, இந்து மாணவிகள் கல்லூரிக்கு அழைத்து செல்லும் படத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, ‘எங்கள் பாரதம், நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்’ என்று கருத்தை பதிவிட்டு இருந்தார்.
Related Tags :
Next Story