‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பராமரிக்கப்படாத பூங்கா
கோபி நகராட்சிக்கு உட்பட்ட கோசாலை நகரில் முன்னாள் படைவீரர்கள் நலச்சங்க வீதியில் நகராட்சி பூங்கா பராமரிக்கப்படாமல் புதர்போல் காணப்படுகிறது. மேலும் இந்த இடத்திலேயே குப்பையை கொண்டுவந்து கொட்டுவதால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதுமட்டுமின்றி நலச்சங்க வீதியில் எங்கு பார்த்தாலும் நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் சிறுவர்கள் வீதியில் நடமாடவே அச்சப்படுகிறார்கள். எனவே நகராட்சி அதிகாரிகள் பூங்காவை சுத்தம் செய்து, தொல்லை தரும் நாய்களை பிடித்துச்செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடியிருப்பு வாசிகள், கோசாலை நகர், கோபி.
தெருவிளக்கு தேவை
ஈரோடு கிழக்கு போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து ஆர்.டி. பள்ளிக்கூடம் வரை ஒரு தெருவிளக்கு கூட இல்லை. இதனால் சுமார் 4 கி.மீ. தூரத்துக்கு இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அடிக்கடி இங்கு வழிப்பறி உள்ளிட்ட சமூக விரோத செயல்களும் நடைபெறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு தேவையான இடங்களில் கம்பங்கள் அமைத்து தெருவிளக்கை ஒளிர செய்ய வேண்டும்.
பொதுமக்கள், சோலார்.
வீணாகும் குடிநீர்
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிரோட்டில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அங்கு குழாய் பதிக்கப்பட்ட இடத்தில் குழி மூடப்பட்டது. இந்தநிலையில் குழி தோண்டி மூடப்பட்ட பகுதியில் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் சாலையில் குடிநீர் வீணாக செல்கிறது. எனவே குடிநீர் வீணாவதை தடுக்க குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரகாஷினி, ஈரோடு.
சாலை அமைக்கப்படுமா?
ஈரோடு ரங்கம்பாளையத்தில் மாவட்ட பதிவாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. மழை பெய்யும்போது சேறும், சகதியுமாக மாறுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே பதிவாளர் அலுவலகத்துக்கு செல்லும் பாதையில் புதிய தார் சாலை அமைக்க வேண்டும்.
மனோஜ்குமார், ரங்கம்பாளையம்.
ஆபத்தான பெட்டி
கோபி சத்தி மெயின் ரோட்டில் ஆர்.டி.ஓ. அலுவலகம் எதிரே உள்ள ஒரு மின்சார பெட்டி திறந்து கிடக்கிறது. இதனால் யாராவது தெரியாமல் அதை தொட்டுவிட்டால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே மின்வாரிய அதிகாரிகள் திறந்து கிடக்கும் மின்சார பெட்டியை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், கோபி.
குளம்போல் தேங்கும் தண்ணீர்
கோபி கலிங்கியம் செல்லும் சாலையில் நகராட்சி குடிநீர் குழாய் வால்வு பகுதியில் இருந்து தண்ணீர் வெளியேறி குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறுகிறார்கள்.
எனவே நகராட்சி அதிகாரிகள் தண்ணீர் வெளியேறும் வால்வை உடனே சரிசெய்ய வேண்டும்.
பொதுமக்கள், கலிங்கியம்.
Related Tags :
Next Story