காங்கிரஸ் உறுப்பினர்களின் போராட்டத்தால் கர்நாடக சட்டசபை 2-வது நாளாக முடங்கியது
காங்கிரஸ் உறுப்பினர்களின் போராட்டத்தால் கர்நாடக சட்டசபை 2-வது நாளாக முடங்கியது
பெங்களூரு:
பதவி நீக்கம் செய்ய வேண்டும்
கர்நாடகத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பில் ஆஜராக தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. இதை தடை உத்தரவை மீறி உடுப்பி, சிவமொக்கா, துமகூரு உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். இதனால் இந்து மாணவர்களும் காவி துண்டு போட்டு வகுப்புக்கு வந்தனர். இதனால் கல்லூரிகளில் பதற்றமான சூழல் நிலவியது. மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. அன்றைய தினம் கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பா, டெல்லி செங்கோட்டையில் காவி ஏற்றும் நாள் வரும் என்று கூறினார். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது.
இதுகுறித்து கர்நாடக சட்டசபையில் நேற்று முன்தினம் காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தது. இதன் மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மந்திரி ஈசுவரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியது. இதை ஏற்க அரசு மறுத்துவிட்டது. இதையடுத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா நடத்தினர். மந்திரி ஈசுவரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
உறுப்பினர்கள் கோஷமிட்டனர்
இதையடுத்து சபை முடங்கியது. சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் கர்நாடக சட்டசபையின் 4-வது நாள் கூட்டம் நேற்று காலை தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் காங்கிரஸ் உறுப்பினர்கள், தங்களின் தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர். மந்திரி ஈசுவரப்பா, தேசத்துரோகி, அவரை பதவி நீக்க வேண்டும், நியாயம் வேண்டும், நீதி வேண்டும், தேசத்துரோக பா.ஜனதா அரசு என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷமிட்டனர். அவர்கள் எழுப்பிய கோஷம் விண்ணை முட்டுவதாக இருந்தது.
அந்த கடும் அமளிக்கு இடையே கேள்வி நேரத்திற்கு சபாநாயகர் காகேரி அனுமதி வழங்கினார். அதில் பா.ஜனதா மற்றும் ஜனதாதளம் (எஸ்) உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட மந்திரிகள் பதிலளித்தனர். ஆனால் காங்கிரசாரின் கோஷத்தால் உறுப்பினர்கள் மற்றும் மந்திரிகள் என்ன பேசுகிறார்கள் என்பது யாருக்கும் புரியவில்லை. கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் கேள்வி நேரம் அரை மணி நேரம் நடைபெற்றது.
சித்தராமையா பேசவில்லை
கேள்வி நேரம் முடிவடைவந்த பிறகு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எழுத்து பூர்வமான பதிலளிக்கப்பட்டது. அதன் பிறகு வருவாய்த்துறை மந்திரி கர்நாடக முத்திரைத்தாள் திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். பின்னர், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்குவதாக சபாநாயகர் அறிவித்தார். அதில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டு பேசுமாறு சபாநாயகர் அழைத்தார். ஆனால் சித்தராமையா பேசவில்லை.
இதையடுத்து சபையை மதியம் 3 மணிக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் காகேரி அறிவித்தார். சபை மீண்டும் 3 மணிக்கு தொடங்கியது. அப்போதும் காங்கிரஸ் உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டனர். சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர். இதனால் சபையில் கூச்சல்-குழப்பம் நிலவியது.
கருத்து வேறுபாடுகள்
சபாநாயகர் காகேரி பேசுகையில், "காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்கள் இருக்கைக்கு திரும்பி சபை நிகழ்வுகள் சரியாக நடைபெற ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருந்தால் நீங்கள் பேசலாம். ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம். ஆனால் இதற்காக நீங்கள் சபையில் போராடுவது சரியல்ல. சபை நடவடிக்கைகளில் நீங்கள் பங்கேற்க வேண்டும். சபைக்கு வெளியே போய் போராட்டம் நடத்துங்கள்" என்று வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்படியபடி இருந்தனர். இதனால் சபையில் அமளில் உண்டானது. இதையடுத்து சபையை சபாநாயகர் காகேரி இன்றைக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்திவைத்தார். இதையடுத்து கர்நாடக சட்டசபை 2-வது நாளாக முடங்கியது. அதே போல் மேல்-சபைலும் மந்திரி ஈசுவரப்பாவை நீக்க கோரி காங்கிரஸ் உறுப்பினர்கள் தர்ணா நடத்தினர். இதையடுத்து சபை மதியத்திற்கு மேல் ஒத்திவைக்கப்பட்டது. சபை மீண்டும் கூடியதும், ஈசுவரப்பாவின் கருத்து குறித்து விவாதம் நடைபெற்றது.
Related Tags :
Next Story