மனைவியை அடித்துக் கொன்று தூக்கில் தொங்கவிட்ட கொடூரம். தற்கொலை என நாடகமாடிய தொழிலாளி கைது
ஒடுகத்தூர் அருகே குடும்ப தகராறில் மனைவியை அடித்து கொலை செய்து விட்டு பிணத்தை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகம் ஆடிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
அணைக்கட்டு
ஒடுகத்தூர் அருகே குடும்ப தகராறில் மனைவியை அடித்து கொலை செய்து விட்டு பிணத்தை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகம் ஆடிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
பரபரப்பான இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருமணம்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூரை அடுத்த ஓங்கப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகன் ரவி (வயது 33), கூலி வேலை செய்து வருகிறார். இவர், ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
அதேபோல் ஆம்பூரை அடுத்த மேல்சானாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மகள் சத்யா(26). இவரும் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து தாய் வீட்டில் வாழ்ந்து வந்தார்.
இவர்கள் இருவருக்கும் பெற்றோர்கள் முன்னிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. அடிக்கடி இவர்களுக்கு இடையே குடும்ப பிரச்சினையில் தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த 6 மாதத்துக்கு முன்பு சத்யா, அவரது தம்பி ஸ்ரீதருக்கு போன் செய்து கணவர் மற்றும் குடும்பத்தினர் ரூ.50ஆயிரம் கேட்டு கொடுமைப்படுத்துகின்றனர் என கூறியுள்ளார்.இதனால் சத்யாவின் குடும்பத்தினர் மருமகன் ரவி மற்றும் அவரது உறவினர்களிடம் சமாதானம் பேசி இருவரையும் பிரச்சினை இல்லாமல் வாழும்படி அறிவுரை கூறி விட்டு வந்துள்ளனர்.
தனிஅறையில் பிணம்
ேநற்று முன்தினம் சத்யா தன் குடும்பத்தாருக்கு போன் செய்து தன்னை அழைத்து செல்லுமாறு அழுது உள்ளார். அப்போது அவரது போனை வாங்கி பேசிய ரவி இன்னும் 2 நாள் கழித்து தானே கொண்டு வந்து மேல்சானாகுப்பத்தில் விடுவதாக கூறியுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை சத்யாவின் தம்பி ஸ்ரீதருக்கு போன் செய்த ரவி உன் அக்கா சத்யா இறந்து விட்டார் என கூறியுள்ளார்.
இதைக்கேட்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்து உறவினர்களுடன் ஓங்கப்பாடிக்கு சென்றபோது தனியறையில் சத்யா பிணமாக கிடந்ததை பார்த்து கதறி அழுதனர். இது குறித்து அவர்கள் ரவியிடம் விசாரித்தபோது சத்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்.
ஆனால் சத்யாவின் கழுத்தில் நகத்தின் கீறல்கள் இருந்ததால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சந்தேகம் அடைந்தனர்.
50-க்கும் மேற்பட்டோர் சென்றனர்
இதனையடுத்து 50-க்கும் மேற்பட்டோருடன் வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு சென்ற பெற்றோர் தங்களது மகள் சத்யாவை ரவி மற்றும் அவரது உறவினர்கள் கொலை செய்து விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ரவியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது குடும்ப தகராறில் மனைவியை அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்து அறைக்குள் இழுத்து சென்று தூக்கில் தொங்கவிட்டேன் என கூறியுள்ளார்.
உடனடியாக ரவியை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து சத்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை கணவனே அடித்து கொடூரமாக கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகம் ஆடிய கணவன் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story