ஒருநபர் ஆணையம் விசாரணை நிறைவு: 3 மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல்


ஒருநபர் ஆணையம் விசாரணை நிறைவு: 3 மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல்
x
தினத்தந்தி 18 Feb 2022 4:52 PM IST (Updated: 18 Feb 2022 4:52 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணையம் விசாரணை நேற்றுடன் நிறைவடைந்தது

தூத்துக்குடி:
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணையம் விசாரணை நேற்றுடன் நிறைவடைந்தது. 3 மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் ஆகிறது.
ஒருநபர் ஆணையம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு 100 நாட்கள் தொடர் போராட்டம் நடந்தது. இதில், 100-வது நாளையொட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி ஏராளமான மக்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள்.
இது தொடர்பாக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. இந்த ஆணைய அதிகாரி கடந்த 9.8.2018 முதல் விசாரணையை தொடங்கினார். மாதந்தோறும் நடைபெற்ற விசாரணையில் துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உறவினர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், சிகிச்சை அளித்த டாக்டர்கள், போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. 36 கட்டங்களாக இந்த விசாரணை நடைபெற்று நேற்று நிறைவடைந்தது.
நடிகர் ரஜினிகாந்த்
இதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரடியாக வந்து ஆஜரானார். அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
நடிகர் ரஜினிகாந்த் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்ததன் காரணமாக விசாரணைக்கு ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் சம்பவத்தை நேரில் பார்க்கவில்லை என்று தெரிவித்ததால், அவரிடம் விசாரணை நடத்தப்படவில்லை.
இதுதவிர அப்போதைய தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி., கூடுதல் டி.ஜி.பி., ஐ.ஜி., டி.ஐ.ஜி., போலீஸ் சூப்பிரண்டுகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை ஆணையத்தின் இறுதி கட்ட விசாரணை கடந்த 14-ந் தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது. இறுதிகட்ட விசாரணைக்காக மொத்தம் 7 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இதில் 6 பேர் ஆஜரானார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து ஒருநபர் விசாரணை ஆணைய வக்கீல் அருள் வடிவேல் சேகர் கூறியதாவது:-
1,048 பேர்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணையம் கடந்த 9.8.18 முதல் இன்று (அதாவது நேற்று) வரை பல்வேறு தரப்பினரிடம் 36 கட்டங்களாக விசாரணை நடத்தி உள்ளது. 1,426 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் பொதுமக்கள் 781 பேர், போலீஸ் மற்றும் வருவாய்த்துறையினர் 255 பேர், ஆணையம் நேரடியாக 12 பேரையும் அழைத்து விசாரணை நடத்தி உள்ளது. மொத்தம் 1,048 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அதே போன்று மனுதாரர்கள் தரப்பில் 1,189 ஆவணங்களும், போலீஸ் மற்றும் வருவாய்த்துறையினர் சார்பில் 262 ஆவணங்களும், ஆணையம் தரப்பில் 93 ஆவணங்களும் பெறப்பட்டன. ஆக மொத்தம் 1,544 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டு உள்ளன.
விசாரணை நிறைவு
கடந்த 3½ ஆண்டுகளாக நடந்து வந்த ஒருநபர் ஆணையத்தின் சாட்சிகள் விசாரணை நிறைவு பெற்றது. 3 மாதத்தில் விசாரணை இறுதி அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்படும். விசாரணைக்கு ஆஜராகாதவர்கள் தாக்கல் செய்த அபிடவிட்டில் உள்ள கருத்துக்களை வேறு சிலரும் தெரிவித்து இருப்பதால், அவர்களை மீண்டும் அழைக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. விசாரணை திருப்திகரமாக இருந்தது. எந்தவித பாகுபாடும் இன்றி விசாரணை நடத்தப்பட்டது.
இடைக்கால அறிக்கை ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு விட்டது. அதன்பிறகு நடத்தப்பட்ட விசாரணைகள் அறிக்கையாக தயாரித்து தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த விசாரணைக்கு உறுதுணையாக இருந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை, மின்சார வாரியம் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
-----------------------------

Next Story