புதைப்பதற்கு எதிர்ப்பு பெண்ணின் உடலை நெடுஞ்சாலையில் வைத்து உறவினர்கள் மறியல்
திருத்தணி அருகே புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பெண்ணின் உடலை நெடுஞ்சாலையில் வைத்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்தணி,
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா கீழவனம் ஊராட்சிக்குட்பட்ட பாரதிநகர் பகுதியில் ஒரு சமூகத்தை சேர்ந்த 3 குடும்பத்தினர் 5 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் அமாவாசை என்பவரது மனைவி வசந்தா (வயது45) உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். நேற்று மாலை வசந்தாவின் உடலை வழக்கமாக பிணங்கள் புதைக்கப்படும் இடமான பாரதி நகர் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் கொண்டு சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த மாற்று சமுகத்தை சேர்ந்த தனிநபர் ஒருவர், சுடுகாடாக பயன்படுத்தும் இடம் எனக்கு சொந்தமானது.
அதற்கு என்னிடம் பட்டாவும் உள்ளதால் இங்கு உடலை புதைக்கக கூடாது என்று தடுத்து நிறுத்தினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த வசந்தாவின் உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் வசந்தாவின் உடலை பெரிய கடம்பூர்- திருத்தணி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் வைத்து மறியல் போராட்டம் நடத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருத்தணி மற்றும் அரக்கோணம் போலீசார், வருவாய்துறையினர் வசந்தாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சுடுகாட்டுக்கு மாற்று இடம் வழங்குவதாக வருவாய்துறையினர் உறுதியளித்ததையடுத்து பெண்ணின் உடலை எடுத்து சென்று மாற்று இடத்தில் அடக்கம் செய்தனர். இதனால் பெரியகடம்பூரில் இருந்து திருத்தணி செல்லும் சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story