அடுத்தடுத்த 2 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு
திருநின்றவூர் அருகே அடுத்தடுத்து 2 கடைகளின் பூட்டை உடைத்து மடிக்கணினி மற்றும் பணம் ஆகியவற்றை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆவடி,
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அடுத்த மேலகொண்டையார் பகுதியை சேர்ந்தவர் தமிழ்குமரன் (வயது 35). இவர் திருநின்றவூர் சி.டி.எச். சாலையில் தனியார் காம்ப்ளக்ஸில் மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து கடையை மூடி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து நேற்று காலை இவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக பக்கத்தில் கடை வைத்திருப்பவர் தமிழ்குமரனுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து தமிழ்குமரன் கடைக்கு வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு பாதி திறந்த நிலையில் இருந்துள்ளது. பின்னர் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த ஒரு மடிக்கணினி மற்றும் கல்லா பெட்டியில் இருந்த ரூ.3 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.
அதேபோல் அவரது கடையின் பக்கத்தில் உள்ள பேக்கரி கடையில் மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து கல்லா பெட்டியில் இருந்த ரூ.5 ஆயிரத்தை திருடி சென்றுள்ளனர். இதேபோல் அருகில் உள்ள பால் கடையிலும் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பணம் எதுவும் இல்லாததால் கடையை அப்படியே விட்டு விட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக திருநின்றவூர் போலீசார் வழக்குபதிவு செய்து அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்ம நபர்களின் உருவத்தை வைத்து விசாரணை செய்து வருகின்றனர். ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து கடைகளில் பூட்டை உடைத்து திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story