பெண் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல்


பெண் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 18 Feb 2022 7:54 PM IST (Updated: 18 Feb 2022 7:54 PM IST)
t-max-icont-min-icon

பெண் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரி தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


தேனி:
கம்பம் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டியை சேர்ந்த முத்துப்பேச்சி என்பவர் கடந்த 12-ந்தேதி மாயமானார். இந்நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு அதே ஊரை சேர்ந்த மனோஜ் என்பவரின் வீட்டில் உடல் புதைக்கப்பட்டது தெரியவந்தது. போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் கடந்த 16-ந்தேதி மனோஜ் வீட்டுக்கு சென்று உடலை தோண்டி எடுத்து அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர். இந்த கொலை தொடர்பாக கூடலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோஜை கைது செய்தனர்.
இந்நிலையில் முத்துப்பேச்சியின் உறவினர்கள் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு மதுரை சாலையில் அமர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் அங்கு வந்த போலீஸ் துணை சூப்பிரண்டு பால்சுதிர் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
புகார் மனு
அப்போது மறியலில் ஈடுபட்ட மக்கள் கூறுகையில், "முத்துப்பேச்சி கொலை வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளது. அதுகுறித்து கூடலூர் தெற்கு போலீசாரிடம் எங்கள் ஊரில் உள்ள சமுதாய பெரியவர்கள் கூறினார்கள். ஆனால், போலீஸ் அதிகாரி ஒருவர் அதை ஏற்காமல், கொலை செய்யப்பட்ட பெண் குறித்து அவதூறான கருத்தை தெரிவித்தார். எனவே, கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும்" என்றனர்.
போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டனர். பின்னர் அவர்களில் சிலர் மட்டும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்று, போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் இதுதொடர்பான புகார் மனுவை கொடுத்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story