ஊத்துக்கோட்டையில் வாக்குப்பதிவு மையத்தில் கலெக்டர் ஆய்வு


ஊத்துக்கோட்டையில் வாக்குப்பதிவு மையத்தில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 18 Feb 2022 8:48 PM IST (Updated: 18 Feb 2022 8:48 PM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்கோட்டையில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் மையங்களை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 10 ஆயிரத்து 463 வாக்காளர்கள் உள்ளனர். 12-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் வெங்கடேசன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மீதமுள்ள 14 வார்டுகளில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 59 பேர் போட்டியிடுகின்றனர்.

மேலும் புதுக்கோட்டையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 3 வாக்குச்சாவடிகள், பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 3 வாக்குச்சாவடிகள், அரசு தொடக்கப்பள்ளியில் 4 வாக்குச்சாவடிகள், கோதண்டராமன் உயர்நிலைப்பள்ளியில் 2 வாக்குச்சாவடிகள், அம்பேத்கர் நகரில் உள்ள நடுநிலைப் பள்ளி மற்றும் மேல் சிற்றபாக்கம் கிராமத்தில் தலா ஒரு வாக்குச்சாவடி உள்ளது. அதேபோல் அம்பேத்கர் நகரில் உள்ள டான்பாஸ்கோ மேல் நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், தேர்தல் மேற்பார்வையாளர் கணேசன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் ஆகியோர் நேற்று வாக்குப்பதிவு மையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது கண்காணிப்பு கேமராக்கள் இயங்குகின்றனவா? மின் இணைப்புகள் சரியாக உள்ளதா? என்று ஆய்வு செய்தனர். அதேபோல் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக சாய்வு தளம் அமைக்கப்பட்டு உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது ஊத்துக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலரும் தேர்தல் அலுவலருமான மாலா, தேர்தல் பார்வையாளர் இளங்கோவன், துணைத் தேர்தல் அலுவலர்கள் நடராஜன், பாண்டியன், முனுசாமி, துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி, இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story