வெளியாட்கள் யாரேனும் தங்கியிருக்கிறார்களா? விழுப்புரம் தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிர சோதனை


வெளியாட்கள் யாரேனும் தங்கியிருக்கிறார்களா? விழுப்புரம் தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிர சோதனை
x
தினத்தந்தி 18 Feb 2022 9:37 PM IST (Updated: 18 Feb 2022 9:37 PM IST)
t-max-icont-min-icon

வெளியாட்கள் யாரேனும் தங்கியிருக்கிறார்களா? என விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.


விழுப்புரம், 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ள நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் வேட்பாளர்களின் இறுதிக்கட்ட பிரசாரம் ஓய்ந்தது. அதன் பிறகு தேர்தல் நடத்தை விதிமுறைப்படி வார்டுகளுக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் அங்கு தங்கக்கூடாது.

இதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளில் பிரசாரத்திற்கு வந்த வெளியாட்கள் யாரும் தங்கக்கூடாது என்றும், அதுபோன்று யாராவது தங்கியிருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

போலீசார் சோதனை

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் வெளியாட்கள் யாரும் தங்கியிருக்கிறார்களா என போலீசார் விடிய, விடிய தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தங்கும் விடுதிகளின் வரவேற்பு அறைகளில் உள்ள பதிவேடுகளையும் போலீசார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.


அப்போது தங்கும் விடுதிகளில் யார், யார் தங்கியுள்ளனர், எதற்காக அவர்கள் வெளியூர்களில் இருந்து வந்தனர் என்பது பற்றிய விவரங்களை தங்கும் விடுதி ஊழியர்களிடம் போலீசார் கேட்டறிந்ததோடு அங்குள்ள அறைகளுக்கும் சென்று விசாரணை நடத்தினர். 

மேலும் வெளியாட்கள் யாரேனும் வாகனங்களில் சுற்றுகிறார்களா? என்பதையும் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். இன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நேற்றும் மாவட்டம் முழுவதும் இந்த சோதனையை போலீசார் தீவிரமாக மேற்கொண்டனர்.

Next Story