பரமத்திவேலூர் அருகே கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை
பரமத்திவேலூர் அருகே கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் அருகே உள்ள நல்லியாம்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 85). இவருடைய மனைவி குழந்தாயி (80). இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த குழந்தாயி திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர்.
இதற்கிடையே பரமத்திவேலூர் அருகே வீரணம்பாளையத்தில் இருந்து பரமத்தி செல்லும் சாலையில் கிழவிக்காடு என்ற பகுதியில் அவர்களுக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றுற்கு அருகே குழந்தாயியின் காலணி மற்றும் ஊன்று கோல் கிடந்ததை பார்த்தனர்.
பின்னர் சந்தேகத்தின் பேரில் வேலாயுதம்பாளையத்தில் உள்ள தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் அங்கு சென்று கிணற்றுக்குள் இறங்கி இறந்த நிலையில் மூதாட்டியின் உடலை மீட்டனர். அப்போது மூதாட்டியின் கண்களில் துணியை கட்டியும், இடுப்பில் தண்ணீர் இரைக்கும் வாளிக்குள் கற்களை நிரப்பி கிணற்றில் குதித்து இறந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story