போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள்


போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள்
x
தினத்தந்தி 18 Feb 2022 10:14 PM IST (Updated: 18 Feb 2022 10:14 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 737 வாக்குச்சாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.

திண்டுக்கல்: 

வாக்குப்பதிவு எந்திரங்கள்
திண்டுக்கல் மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 23 பேரூராட்சிகளில் 478 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு  இன்று (சனிக்கிழமை) தேர்தல் நடக்கிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் 737 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதையொட்டி வாக்குப்பதிவுக்கு 894 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 894 கட்டுப்பாட்டு எந்திரங்கள் ஒதுக்கப்பட்டன.
இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் பொருத்தப்பட்டன. பின்னர் அவை அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலரின் மேற்பார்வையில் தனி அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டன. அதோடு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

வாக்குச்சாவடிக்கு அனுப்பும் பணி
இந்தநிலையில் இன்று தேர்தல் நடப்பதையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பும் பணி நேற்று காலை தொடங்கியது. இதற்காக 737 வாக்குச்சாவடிகளும் 60 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். மேலும் வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்வதற்கு 60 போலீஸ் படைகளும் அமைக்கப்பட்டு, தனியாக வாகனமும் வழங்கப்பட்டது.
எனவே வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்த இடத்துக்கு நேற்று காலை 10 மணிக்கு மண்டல அலுவலர்கள், போலீஸ் படையினர் வாகனத்துடன் வந்தனர். இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்ட அறை திறக்கப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் மண்டல அலுவலர்களிடம் வழங்கப்பட்டன.

திண்டுக்கல் மாநகராட்சி 
இதில் திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 183 வாக்குச்சாவடிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள் திண்டுக்கல் நேருஜி நினைவு மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை வாக்குச்சாவடிக்கு அனுப்பும் பணி நேற்று காலை தொடங்கியது. இதனை கலெக்டர் விசாகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதற்கிடையே மண்டல வாரியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள் மற்றும் அழியாத மை, படிவங்கள் உள்பட 57 வகையான பொருட்கள் வாகனங்களில் ஏற்றப்பட்டன. இவை அனைத்தும் வாக்குச்சாவடி வாரியாக தனித்தனியாக வழங்கப்பட்டன. இதையடுத்து கற்பூர தீபம் காண்பிக்கப்பட்டு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

வாக்குச்சாவடிகள் தயார்
மேலும் ஒவ்வொரு வாகனத்திலும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக சென்றனர். பின்னர் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில், அந்தந்த அலுவலர்களிடம் அவை ஒப்படைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டன.

அதேபோல் வாக்குச்சாவடியின் வாசலில் வேட்பாளர்கள் மற்றும் சின்னங்கள் இடம்பெற்ற சுவரொட்டி ஒட்டப்பட்டது. மேலும் வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் வெள்ளைநிற கோடு வரையப்பட்டது. உடனே அதில் இருந்து சிறிது தூரத்தில் வேட்பாளர்கள் பூத் அமைத்தனர். மேலும் வாக்குச்சாவடிகள் தயாரானதால் நேற்று மதியம் முதல் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story