ஓடும் பஸ்சில் மாணவர்கள் மோதல் நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளி மாணவ மாணவிகள் திடீர் சாலை மறியல்
கச்சிராயப்பாளையம் அருகே ஓடும் பஸ்சில் மாணவர்களுக்கிடையே நடந்த மோதல் சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி ஒரு தரப்பை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கச்சிராயப்பாளையம்
மாணவர்கள் மோதல்
கச்சிராயப்பாளையம் அருகே உள்ள க.அலம்பலம் மற்றும் பொன்பரப்பட்டு ஆகிய கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் மாலையில் வகுப்பு முடிந்ததும் இரு கிராமங்களை சேர்ந்த மாணவர்களும் கள்ளக்குறிச்சியில் இருந்து பொன்பரப்பட்டு கிராமத்துக்கு அரசு பஸ்சில் வந்து கொண்டிருந்தபோது அவர்களுக்கிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதையடுத்து டிரைவர் பஸ்சை கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தினார். போலீசார் இரு தரப்பு மாணவர்களையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அசம்பாவித சம்பவங்களை தடுக்க இரு கிராமங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
சாலை மறியல்
இந்த நிலையில் மோதல் சம்பவத்தில் தொடர்புடைய க.அம்பலம் கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொன்பரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்களை கைது செய்யக்கோரி கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா அங்கு வந்து மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது இந்த சம்பவம் தொடர்பாக புகார் மனு கொடுத்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து மாணவ-மாணவிகள், அவர்களின் பெற்றோர் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கச்சிராயப்பாளையம்-கள்ளக்குறிச்சி சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
4 பேர் மீது வழக்கு
பின்னர் பொன்பரப்பட்டு கிராமத்தினர் கொடுத்த புகாரின் பேரில் க.அம்பலம் கிராமத்தை சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓடும்பஸ்சில் நடந்த மோதல் சம்பவத்தில் தொடர்புடைய மாணவர்களை கைது செய்யக்கோரி ஒரு தரப்பை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story