தர்மபுரிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட உரங்கள் வேறு மாவட்டத்துக்கு கொண்டு செல்வதை தடுக்க வாகன சோதனை


தர்மபுரிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட உரங்கள் வேறு மாவட்டத்துக்கு கொண்டு செல்வதை தடுக்க வாகன சோதனை
x
தினத்தந்தி 18 Feb 2022 10:42 PM IST (Updated: 18 Feb 2022 10:42 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட உரங்கள் வேறு மாவட்டத்துக்கு கொண்டு செல்லப்படுகிறதா? என வேளாண்மைத்துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட உரங்கள் வேறு மாவட்டத்துக்கு கொண்டு செல்லப்படுகிறதா? என வேளாண்மைத்துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
உரம் இருப்பு
தர்மபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையால் நல்ல மழை பெய்துள்ளதால் விவசாயிகள் சாகுபடியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் சாகுபடிக்கு தேவையான உரங்கள், யூரியா, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உள்ளிட்டவை போதுமான அளவு இருப்பு உள்ளன. இவை அனைத்தும் கூட்டுறவு சங்கங்கள், தனியார் உரம் விற்பனை நிலையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் உரங்கள் அந்தந்த மாவட்டத்திற்குள் மட்டுமே வினியோகிக்கப்பட வேண்டும். பிற மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் இருந்து தர்மபுரி மாவட்டத்துக்குள் கொண்டு வரவும் தடை உள்ளது. 
வாகன சோதனை
இதையடுத்து தர்மபுரி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட உரங்களை  வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் காரிமங்கலம் அடுத்த கும்பாரஅள்ளி சோதனைச்சாவடியில் தர்மபுரி தரக்கட்டுப்பாடு வேளாண்மை உதவி இயக்குனர் தாம்சன் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பிரமணியன், வேளாண் அலுவலர் கனகராசு ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அரசு விதிமுறைகளை மீறி தர்மபுரி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட உரங்களை வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறதா? என ஆய்வு செய்தனர். மீறி உரங்களை கொண்டு சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வசந்தரேகா தெரிவித்துள்ளார்.

Next Story