குடியாத்தம் அருகே மாடு குறுக்கே வந்ததால் மரத்தில் கார்மோதி 2 பேர் பலி
குடியாத்தம் அருகே மாடு குறுக்கே வந்ததால் மரத்தில் கார்மோதி 2 பேர் பலியானார்கள்.
குடியாத்தம்
குடியாத்தம் அருகே மாடு குறுக்கே வந்ததால் மரத்தில் கார்மோதி 2 பேர் பலியானார்கள். 3 பேர் படுகாயமடைந்தனர்.
காரில் வந்தனர்
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. மதுபான கடைகள் நடத்தி வந்தார். இவரது மகன் ஜெயசிம்மா (வயது 26). மதுபானக்கடைகளை கவனித்து வந்தார். இவர்களது கடைகளில் காட்பாடி தாலுகா லத்தேரியை அடுத்த செஞ்சி கிராமத்தைச் சேர்ந்த வரதராஜன் மகன் லோகேஸ்வரன் (35) என்பவர் பணியாற்றி வருகிறார்.
பலமநேர் பகுதியை சேர்ந்த அவரது உறவினர் வம்சிகிருஷ்ணா (31) வியாபாரம் செய்து வருகிறார். மகேஷ் என்கிற நானி (25). இவர் தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த உபேந்திரா (46) டிரைவராக வேலைபார்த்தார்.
லோகேஸ்வரனுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இதனையடுத்து நேற்று மாலையில் பலமநேரிலிருந்து ஜெயசிம்மா தனது காரில் உபேந்திரா, லோகேஸ்வரன், வம்சிகிருஷ்ணா, மகேஷ் என்கிற நானி ஆகியோருடன் குடியாத்தம் நோக்கி வந்துள்ளார். காரை ஜெயசிம்மா ஓட்டி வந்துள்ளார்.
மரத்தில் மோதி 2 பேர் பலி
தமிழக- ஆந்திர எல்லையோரம் தமிழக பகுதியைச் சேர்ந்த சைனகுண்டா கிராமம் அருகே எர்ரமிட்டா என்ற பகுதியில் கார் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது மேய்ச்சலுக்கு சென்றிருந்த 2 மாடுகள் திடீரென குறுக்க சென்றுள்ளன. இதனால் மாடுகள் மீது மோதாமல் இருக்க முயன்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள பனை மரத்தில் வேகமாக மோதி உள்ளது.
இதில் 5 பேரும் காருக்குள் சிக்கி படுகாயமடைந்தனர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து கிராம மக்கள் விரைந்து வந்து மீட்கும்பணியில் ஈடுபட்டனர். லோகேஸ்வரன், வம்சி கிருஷ்ணா, மகேஷ் என்கிற நானி ஆகிய 3 பேரை உயிருடன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஜெயசிம்மா, உபேந்திரா ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்துவிட்டனர்.
போலீஸ் விசாரணை
பின்னர் குடியாத்தம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 3 பேரும் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி உள்ளிட்ட போலீசார் காரில் சிக்கி பலியான ஜெயசிம்மா, உபேந்திரா ஆகியோர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story