பட்டுவாடா செய்வதற்கு வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் சிக்கியது
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்கு வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சத்தை பறக்கும் படையினரிடம் மாற்று கட்சியினர் ஒப்படைத்தனர்.
திருவண்ணாமலை
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்கு வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சத்தை பறக்கும் படையினரிடம் மாற்று கட்சியினர் ஒப்படைத்தனர்.
ரூ.10 லட்சம்
திருவண்ணாமலை நகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இறுதி கட்ட பிரசாரம் நேற்று முன்தினம் நிறைவடைந்த நிலையில் வேட்பாளர்கள் சிலர் வாக்காளர்களை கவரும் வகையில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கும் பணியில் நேற்று முன்தினம் இரவு தீவிரமாக ஈடுபட்டனர்.
வாக்காளர்களுக்கு ஓட்டிற்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுப்பதற்காக அமைக்கப்பட்டு இருந்த பறக்கும் படையினரும் ஒருபக்கம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
பணப்பட்டுவாடா நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் தேனிமலை பகுதியில் பறக்கும் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மாற்று கட்சியினர் அங்கு வந்து, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் பணம் பதுக்கி வைத்திருப்பதாக கூறினர். மேலும் அவர்கள் அந்த வீட்டில் இருந்து ரூ.10 லட்சத்தை எடுத்து வந்து பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கருவூலத்தில் ஒப்படைப்பு
அந்த வீட்டில் இருந்த நபர்கள் லோன் வாங்கி வைத்திருந்ததாக கூறினர். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து பறக்கும் படையினர் ரூ.10 லட்சத்தை பறிமுதல் செய்து திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் மதியம் வரை சமர்ப்பிக்கபடாததால் அந்த பணத்தை நகராட்சி அலுவலர்கள் மூலம் சார் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து நகராட்சி அலுவலகத்திற்கு ஆய்வு பணிக்காக வந்த மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான முருகேஷ் கூறுகையில், வேட்பாளருக்காக ஒருவரின் வீட்டில் வைத்திருந்த ரூ.10 லட்சம் எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வந்து உள்ளது. அந்த பணம் சார் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. அந்த பணத்திற்கான ஆவணங்கள் இருப்பதாக கூறுகின்றனர். இதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழு மூலம் விசாரணை நடத்தப்பட்டு அந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்தனரா அல்லது சொந்த செலவிற்காக வைத்திருந்தனரா என்று முடிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story