கன்னியாகுமரியில் பயங்கரம் கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை
கன்னியாகுமரியில் கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். தேர்தல் தகராறு காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரியில் கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். தேர்தல் தகராறு காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் படுகொலை
கன்னியாகுமரி ரெயில் நிலையம் அருகே நான்கு வழிச்சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் அடியில் கழுத்து அறுக்கப்பட்டு வாலிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இதனை நேற்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா தலைமையில் போலீசார் விரைந்து வந்து கொலை செய்யப்பட்டவரின் உடலை பார்வையிட்டனர். அப்போது அந்த பகுதி முழுவதும் ரத்தக்கறை படிந்திருந்தது. அருகில் மதுபாட்டில்களும் கிடந்தன.
இரவில் நடந்ததா?
பின்னர் சம்பவ இடத்துக்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. கொலை நடந்த பகுதியில் மோப்பம் பிடித்த நாய் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் ஓடி சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
மேலும் கொலை நடந்த இடத்தில் கைரேகைகள் ஏதேனும் பதிவாகி உள்ளதா? என தடயவியல் நிபுணர்களும் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். கொலை செய்யப்பட்டவருக்கு சுமார் 35 வயது இருக்கும் என்று கூறப்படுகிறது. பயங்கர ஆயுதத்தால் வாலிபரின் கழுத்து அறுக்கப்பட்டு ரத்தம் உறைந்த நிலையில் இருந்ததால் கொலை இரவில் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
தேர்தல் தகராறா?
மேலும் கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. மதுபோதை தகராறில் அந்த வாலிபர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தேர்தல் தகராறில் இந்த கொலை நடந்துள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தொடர்ந்துள்ளனர்.
முதலில் கொலை செய்யப்பட்டவர் யாரென்ற விவரம் தெரிந்த பிறகு தான் கொலைக்கான பின்னணி என்ன? கொலையில் ஈடுபட்ட கும்பல் யார்? என்பதை கண்டுபிடிக்க முடியும் என போலீசார் தெரிவித்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் கஞ்சா போதையில் இரட்டைக்கொலை சம்பவம் நடந்தது. இந்தநிலையில் மீண்டும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கொலை நடந்ததால், அதே மாதிரியான போதை தகராறில் கும்பல் கொலை வெறியில் ஈடுபட்டுள்ளனரா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. மேலும் இதுதொடர்பாக கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story