‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆபத்தான பயணம்
திருச்சி மாவட்டம் செந்தண்ணீர்புரத்திலிருந்து சத்திரம் பஸ் நிலையம் செல்லும் பஸ்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் வாலிபர்கள் சிலர் பஸ்சின் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்கிறார்கள். போக்குவரத்து போலீசார் பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தியும் இளைஞர்கள் கண்டுகொள்வதில்லை. இதனால் விபத்து ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் பஸ்படிக்கட்டில் தொங்கி பயணம் செய்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், இப்பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஜயா, திருச்சி.
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
திருச்சி மாநகராட்சியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாநகரில் குப்பைத்தொட்டிகளை அகற்றி குப்பைத்தொட்டிகள் இல்லாத மாநகராக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. தூய்மை பணியாளர்கள் வீடுகளுக்கே சென்று குப்பைகளை சேகரித்து வந்தனர். ஆனால் கடந்த சில மாதங்களாக குப்பைகளை சேகரிக்க தூய்மை பணியாளர்கள் சரிவர வராததால் சாலையோரங்களில் குப்பைகள் அதிகளவு கொட்டப்படுகிறது. மேலும், சிலர் தீ வைத்து எரிப்பதால் புகைமூட்டம் நிலவி வருகிறது. மேலும் தேங்கிக்கிடக்கும் குப்பைகளால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை சாலையோரம் குவித்து வைக்காமல் உடனுக்குடன் அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ராஜா, திருச்சி.
சாலையை சீரமைக்க கோரிக்கை
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் இருந்து முசிறி செல்லும் வழியில் குருவம்பட்டி-வடக்கு சித்தாப்பூர் கிராமத்திற்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும். மண்ணச்சநல்லூர்-முசிறி செல்லும் சாலையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை மிகவும் குறுகியதாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த சாலையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழனிச்சாமி , திருச்சி.
Related Tags :
Next Story