அ.தி.மு.க.வினர் திடீர் போராட்டம்; தி.மு.க.வினரும் திரண்டதால் பரபரப்பு
பேரையூர் ேபரூராட்சி அலுவலகத்தில் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் திடீர் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். பதிலுக்கு தி.மு.க.வினரும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பேரையூர்,
பேரையூர் ேபரூராட்சி அலுவலகத்தில் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் திடீர் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். பதிலுக்கு தி.மு.க.வினரும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
158 சேலைகள் பறிமுதல்
மதுரை மாவட்டம் பேரையூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கு இன்று(சனிக்கிழமை) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் முறைகேடு நடப்பதை தடுப்பதற்காக பறக்கும் படை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கிடைத்த தகவலின் பேரில் பேரையூர் பஸ்நிலைய நுழைவு வாயில் பகுதி அருகே 3 இருசக்கர வாகனங்களில் சேலைகளை கொண்டு வந்தவர்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். இதில் சரியான ஆவணங்கள் இல்லாமலும், முன்னுக்குப்பின் முரணாக கூறியதாலும், வாக்காளர்களுக்கு வினியோகிக்க கொண்டு வந்ததாக 158 சேலைகள் மற்றும் 3 இருசக்கர வாகனங்களையும், பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து பேரையூர் போலீசில் ஒப்படைத்தனர்.
அ.தி.மு.க. வேட்பாளர் மீது வழக்கு
இதுகுறித்து பறக்கும்படை அலுவலரும், தாசில்தாருமான உதயசங்கர் பேரையூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் பேரையூரை சேர்ந்த முருகன் (வயது 63), மகாதேவன் (36), அ.தி.மு.க. வேட்பாளர் மாசானம்(60) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. தலைமையில், ஒன்றிய செயலாளர் ராமசாமி மற்றும் அ.தி.மு.க.வினர் பேரையூர் பஸ் நிலையம் பகுதியில் உள்ள பேரூராட்சி அலுவலகம் முன்பு திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போடப்படுவதாகவும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.
தி.மு.க.வினரும் திரண்டனர்
இந்த நிலையில் பேரையூர் தி.மு.க. நகர செயலாளர் பாஸ்கரன், பேரையூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் கே.கே.குருசாமி மற்றும் தி.மு.க. காங்கிரஸ், தொண்டர்களும் போட்டி போராட்டத்துக்கு திரண்டனர். அவர்கள் பேரூராட்சி அலுவலகத்தை நோக்கி முன்னேறினார்கள்.
தவறான தகவல் கூறி பேரூராட்சி அலுவலகத்தில் போராட்டம் நடத்தும் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ.வை உடனடியாக போலீசார் வெளியேற்ற வேண்டும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க.வினர் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே பேரையூர் துணை சூப்பிரண்டு சரோஜா மற்றும் போலீசார் தி.மு.க.வினரை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. பேரையூர் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயதாராவை சந்தித்து மனு கொடுத்தார். அதில் பேரூராட்சி 15 வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் போலீசார், உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று கூறினார்கள். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் பேரையூர் பஸ் நிலையம் மற்றும் ேபரூராட்சி அலுவலக பகுதி 2 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
Related Tags :
Next Story