கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தால் வீடுகள் பாதிக்கப்படுவதாக கூறி பாலன் நகர் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் கடந்த ஆண்டு தொடங்கி பணிகள் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே குன்னத்தூரில் முதல்கட்ட பணிகள் தொடங்கிய நிலையில் கூடுதலாக நிலம் கையகப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. இதற்காக நிலம் அளவீடு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் புதுகோட்டை பாலன் நகர் பகுதியில் இத்திட்ட பணிகள் தொடர்பாக நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெற்றுள்ளது. இதில் குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களின் வீடும் கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
பொதுமக்கள் முற்றுகை
இதனால், அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து நுழைவுவாயிலில் அமர்ந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தினால் தங்கள் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்படுவதாகவும், அதனால் வேறு பாதையில் இத்திட்டத்தை செயல்படுத்த கோரினர். அப்போது பெண்களில் பலர் தரையில் புரண்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். மேலும், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க அவர்களை அழைத்து சென்றனர். அங்கு அதிகாரிகளிடம் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை முறையிட்டனர்.
Related Tags :
Next Story