பள்ளி மாணவர்களுக்கு தொழுநோய் பரிசோதனை முகாம்
ஒரத்தநாடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு தொழுநோய் பரிசோதனை முகாமினை தஞ்சை மாவட்ட தொழுநோய் துணை இயக்குனர் டாக்டர் குணசீலன் தொடங்கி வைத்தார்.
ஒரத்தநாடு:
ஒரத்தநாடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு தொழுநோய் பரிசோதனை முகாமினை தஞ்சை மாவட்ட தொழுநோய் துணை இயக்குனர் டாக்டர் குணசீலன் தொடங்கி வைத்தார்.
பரிசோதனை முகாம்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தீவிர தொழுநோய் பரிசோதனைகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரத்தநாடு தூய மரியன்னை நடுநிலைப்பள்ளியில் தஞ்சை மாவட்ட தொழுநோய் துணை இயக்குனர் டாக்டர் குணசீலன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் பள்ளி மாணவர்களை ஆய்வு செய்து தொழுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பள்ளியில் பயிலும் 398 மாணவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஒரு மாணவருக்கு மட்டும் தொழுநோய்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டு அந்த மாணவருக்கு உடனடியாக சிகிச்சைகள் தொடங்கப்பட்டன.
விழிப்புணர்வு
இதுகுறித்து தஞ்சை மாவட்ட தொழுநோய் துணை இயக்குனர் டாக்டர் குணசீலன் கூறியதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இனி வரும் காலங்களில் தீவிர தொழுநோய் பரிசோதனை முகாம்கள் மேற்கொள்ளப்பட்டு, ஆரம்ப நிலையிலேயே தொழுநோய் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்படும். இதன் மூலம் அவர்கள் ஊனம் அடைவது தடுக்கப் படுவதுடன், நோய் குறித்த விழிப்புணர்வும் ஏற்படும். எனவே, உணர்ச்சி அற்ற தேமல் முதலான ஆரம்ப அறிகுறிகள் உள்ளவர்கள் தயங்காமல், தாமதிக்காமல் அருகிலுள்ள அரசு ஆஸ்பத்திரி அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் தஞ்சை மாவட்ட தொழுநோய் துணை இயக்குனர் அலுவலக மருத்துவமல்லா மேற்பார்வையாளர்கள் நாகராஜ், செல்வம், சுகாதார ஆய்வாளர்கள் இளந்திரையன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஒரத்தநாடு வட்டார மருத்துவமல்லா மேற்பார்வையாளர் சிவக்குமார், பள்ளி தலைமை ஆசிரியை செல்வராணி ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story