வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு
வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
பெரம்பலூர்:
இன்று ஓட்டுப்பதிவு
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சியில் 21 வார்டுகளும், குரும்பலூர், அரும்பாவூர், லெப்பைக்குடிகாடு ஆகிய பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகளும், பூலாம்பாடி பேரூராட்சியில் 2 வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் மீதமுள்ள 13 வார்டுகளும் என மொத்தம் 79 வார்டுகளுக்கு 110 வாக்குச்சாவடிகளில் இன்று ஓட்டுப்பதிவு நடைபெறவுள்ளது.
இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் நகராட்சியில் 18 வார்டுகளும், ஜெயங்கொண்டம் நகராட்சியில் 21 வார்டுகளும், வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் 15 வார்டுகளும், உடையார்பாளையம் பேரூராட்சியில் ஒரு வார்டில் வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் மீதமுள்ள 14 வார்டுகளிலும் என மொத்தம் 68 வார்டுகளுக்கு 101 வாக்குச்சாவடிகளில் இன்று ஓட்டுப்பதிவு நடைபெறவுள்ளது.
தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்
ஓட்டுப்பதிவிற்காக பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் மொத்தம் 211 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. இறுதி வாக்காளர் பட்டியலின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி, பேரூராட்சிகளில் 41,179 ஆண் வாக்காளர்களும், 44,039 பெண் வாக்காளர்களும், 6 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 85,224 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதே போல் அரியலூர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் 33,679 ஆண் வாக்காளர்களும், 36,105 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 69,784 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் இருந்து 100 மீட்டர், 200 மீட்டர் தொலைவினை வாக்காளர்கள் அறியும் வகையில் சாலையில் வெள்ளை வர்ணம் மூலம் கோடு போடப்பட்டுள்ளது. மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேற்று முன்தினம் மாலை தங்களது இறுதி கட்ட பிரசாரத்தை முடித்து கொண்டனர்.
வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணி
இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு போலீசார் பாதுகாப்புடன் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்படும் 80 வகையான பொருட்கள் அடங்கிய பையும், கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களான 13 வகையான பொருட்களும் லாரிகள் மூலம் அனுப்பும் பணி, அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் நேற்று நடந்தது. லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்ட எந்திரங்கள் மற்றும் பொருட்கள், அந்தந்த வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி அலுவலர்கள் முன்னிலையில் இறக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குவதால் அதிகாலையில் வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு கருவி ஆகியவற்றை வாக்குச்சாவடி அலுவலர்கள் பொருத்தி தயார் நிலையில் வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story