அழிந்து வரும் அலையாத்தி காடுகளை பராமரிக்க வேண்டும்


அழிந்து வரும் அலையாத்தி காடுகளை பராமரிக்க வேண்டும்
x
தினத்தந்தி 19 Feb 2022 1:17 AM IST (Updated: 19 Feb 2022 1:17 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் அழிந்து வரும் அலையாத்தி காடுகளை பராமரிக்க வேண்டும் என்று கடல் வாழ் ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேதுபாவாசத்திரம்: 
தஞ்சை மாவட்டத்தில் அழிந்து வரும் அலையாத்தி காடுகளை பராமரிக்க வேண்டும் என்று கடல் வாழ் ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
அழிந்து வரும் அலையாத்தி காடுகள்
நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்ட கடல்பகுதிகளில் அலையாத்தி காடுகள் அரணாக இருந்து கடல்பகுதிகளை பாதுகாத்து வருகிறது. 
ஆசிய கண்டத்திலேயே அலையாத்தி காடுகள் உள்ள ஒரே பகுதி தமிழ்நாடு. கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமியால் பல்வேறு நாடுகளில் ஏராளமானோர் உயிரிழந்தனர். ஆனால் தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்ட கடல் பகுதிகளில் சுனாமியை நெருங்க விடாமல் தடுத்து மக்களை காப்பாற்றியது இந்த அலையாத்தி காடுகள் தான். தற்ேபாது போதிய பராமரிப்பு இல்லாமல் இந்த அலையாத்தி காடுகள் அழிந்து வருவது கவலைக்குரியதாக உள்ளது. 
மீன்கள் இனப்பெருக்கம்
மேலும் அலையாத்திகாடுகள் அழிந்துவருவதால் கடல் வளமும் பாதிக்கப்படுகிறது.
இறால், நண்டு, மீன் ஆகியவை இனப்பெருக்கம் செய்ய அலையாத்தி மரங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. நல்ல தண்ணீரும், உப்புத்தண்ணீரும் சேரும் இடங்களில் அலையாத்தி காடுகள் உள்ளது. இதனால் மீன்கள் இனப்பெருக்கம் செய்ய அலையாத்தி மரங்களின் வேர் பகுதிகளை நாடி வருகிறது.
அலையாத்தி மரங்கள் அழிந்து வருவதற்கு காரணம் கடலில் மழைநீர் மற்றும் நல்ல தண்ணீர் கலந்து வந்த நிலைமாறி உள்ளது. தற்போது கெமிக்கல் உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் கடலில் கலந்து வருவது தான் இதற்கு காரணம் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 
பராமரிக்க வேண்டும்
தஞ்சை கடல் பகுதியில் மீன்பிடித்தொழில் நலிவடைய காரணம் கடல் வளம் குறைந்தது தான். எனவே கடல்வளம் பெருக வேண்டும் என்றால் அழிந்து வரும் அலையாத்தி காடுகளை பராமரிக்க வேண்டும் என்று கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
இதுபற்றி கடல் வாழ் உயிரின  ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், கடலில் மீன்  உற்பத்திக்கு அலையாத்தி மரங்கள் முக்கிய  பங்கு வகிக்கிறது. அலையாத்தி மர இலைகள் மக்கி கடலில் கலப்பதால், கடலில் உள்ள உயிரினங்களுக்கு இது உணவாக பயன்படுகிறது. குறிப்பாக இறால் மற்றும் நண்டு வகைகள் அலையாத்தி காடுகள் உள்ள பகுதிகளில் உற்பத்தி அதிகம் இருக்கும்.  அவ்வாறு உள்ள பகுதிகளில் தான் இறால் அதிகம் கிடைக்கிறது. இதனால் அழிந்துவரும் அலையாத்தி காடுகளை பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்றனர். 

Next Story