603 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு


603 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 19 Feb 2022 1:58 AM IST (Updated: 19 Feb 2022 1:58 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் 603 வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் 603 வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

17 பேரூராட்சி
தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், சுரண்டை ஆகிய 6 நகராட்சிகள் மற்றும் அச்சன்புதூர், சுந்தரபாண்டியபுரம், ஆய்க்குடி, குற்றாலம், புதூர் உள்பட 17 பேரூராட்சிகளுக்கான வார்டு உறுப்பினர்கள் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதற்காக அந்தந்த நகராட்சி அலுவலகங்கள் மற்றும் பேரூராட்சி அலுவலங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பும் பணி நடைபெற்றது.
தென்காசி நகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த எந்திரங்கள், வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் 80 வகையான பொருட்கள் மற்றும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தேவைப்படும் பொருட்கள் ஆகியன அனுப்பி வைக்கப்பட்டன. தென்காசி உதவி கலெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறைகளின் சீல் உடைக்கப்பட்டு தென்காசி நகராட்சி பகுதியில் உள்ள 71 வாக்குச்சாவடிகளுக்கும் அனுப்பப்பட்டன.

நகராட்சி பகுதிகள்
இதே போன்று செங்கோட்டை நகராட்சி பகுதியில் உள்ள 25 வாக்குச்சாவடிகளுக்கும், கடையநல்லூர் நகராட்சி பகுதியில் உள்ள 82 வாக்குச்சாவடிகளுக்கும், புளியங்குடி நகராட்சி பகுதியில் உள்ள 65 வாக்குச்சாவடிகளுக்கும், சங்கரன்கோவில் நகராட்சி பகுதிகளில் உள்ள 57 வாக்குச்சாவடிகளுக்கும், சுரண்டை நகராட்சி பகுதியில் உள்ள 38 வாக்குச்சாவடிகள் மற்றும் பேரூராட்சி வாக்குச்சாவடிகள் என மாவட்டத்தில் 603 வாக்குச்சாவடிகளுக்கும் இவை அனுப்பப்பட்டன.

சூப்பிரண்டு தலைமையில் பாதுகாப்பு
தேர்தலையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் கூறியதாவது:-
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தென்காசி மாவட்டத்தில் எனது தலைமையில் ஒரு பயிற்சி உதவி சூப்பிரண்டு, 9 துணை சூப்பிரண்டுகள், 34 இன்ஸ்பெக்டர்கள், 208 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், 1207 போலீசார், 191 ஆயுதப்படை போலீசார், 151 சிறப்பு காவல் படையினர், 147 ஊர்க்காவல் படையினர், 155 முன்னாள் ராணுவத்தினர் ஆக மொத்தம் 2,106 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்படுகிறது. கள்ள ஓட்டு போட முயற்சித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எங்காவது பிரச்சினை ஏற்பட்டால் அதுகுறித்த தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கட்டுப்பாட்டு அறை 04633-299100 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் கொடுக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

கொடி அணிவகுப்பு
தென்காசியில் நேற்று போலீஸ் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பு தென்காசி காசிவிஸ்வநாதர் சுவாமி கோவில் முன்பு இருந்து புறப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். உதவி சூப்பிரண்டு (பயிற்சி) கிருஷ் யாதவ் அசோக், தென்காசி துணை சூப்பிரண்டு மணிமாறன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
சுவாமி சன்னதி பஜார், பொன்னி பாறை தெரு, கொடிமரம், மவுண்ட் ரோடு, கூலக்கடை பஜார் வழியாக போலீஸ் நிலையத்தை அடைந்தது.


Next Story