9 மையங்களில் 143 மேஜைகளில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்
வருகிற 22-ந்தேதி குமரி மாவட்டத்தில் 9 வாக்கு எண்ணும் மையங்களில் 143 மேஜைகளில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது என்று கலெக்டர் அரவிந்த் கூறினார்.
நாகர்கோவில்:
வருகிற 22-ந்தேதி குமரி மாவட்டத்தில் 9 வாக்கு எண்ணும் மையங்களில் 143 மேஜைகளில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது என்று கலெக்டர் அரவிந்த் கூறினார்.
கலெக்டர் ஆய்வு
குமரி மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாவட்டத்தின் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் எந்த சிரமமும் இன்றி வாக்களிப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது.
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 52 வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ள வாக்குச்சாவடி மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணியை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அரவிந்த் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
வாக்கு எண்ணிக்கை
குமரி மாவட்டத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு மாநகராட்சி, குளச்சல், பத்மநாபபுரம், குழித்துறை, கொல்லங்கோடு ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் 51 பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. மாநகராட்சிக்கான வாக்கு எண்ணும் மையமான எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளியும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், மாவட்டத்தில் 8 வாக்கு எண்ணும் மையங்களில் 18 பாதுகாப்பு அறைகளில் தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இருப்பு வைக்கப்படும். வருகிற 22-ந் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கை 51 பேரூராட்சிகளுக்கு ஒரு பேரூராட்சிக்கு இரு மேஜைகள் வீதம் 102 மேஜைகளிலும், நகராட்சிகளான குழித்துறை, பத்மநாபபுரம் நகராட்சிகளுக்கு தலா இரு மேஜைகளும், குளச்சல் நகராட்சிக்கு மூன்று மேஜைகளிலும், கொல்லங்கோடு நகராட்சிக்கு 6 மேஜைகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
143 மேஜைகள்
நாகர்கோவில் மாநகராட்சியில் இரு வாக்கு எண்ணிக்கை மையங்களில் தலா 13 மேஜைகள் வீதம் 26 மேஜைகளிலும், 2 மேஜைகளில் அஞ்சல் வாக்கும் எண்ணப்பட உள்ளது. மொத்தம் குமரி மாவட்டத்தில் 143 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இவ்வாறு கலெக்டர் அரவிந்த் கூறினார்.
இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாகராஜன், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, மாநகர நல அதிகாரி விஜய் சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story