‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 19 Feb 2022 4:56 AM IST (Updated: 19 Feb 2022 4:56 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கூடுதல் பஸ்வசதி
அவல்பூந்துறை வழியாக தாண்டாம்பாளையத்துக்கு 2 பஸ்கள் மட்டுமே சுழற்சி முறையில் இயக்கப்படுகிறது. இந்த வழியாக நாள்தோறும் ஏராளமான மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் பஸ் பயணம் மேற்கொள்கிறார்கள். அடிக்கடி இந்த 2 பஸ்களும் பழுது காரணமாக இயக்கப்படுவதில்லை. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் அவல்பூந்துறை வழியாக தாண்டாம்பாளையத்துக்கு கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கந்தசாமிபாளையம்.

ஆபத்தான மின் கம்பம் 
அந்தியூர் தவுட்டுப்பாளையத்தில் உள்ள மின்கம்பத்தில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் தெரிகின்றன. பலத்த காற்று அடித்தால் மின் கம்பம் சாய்ந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே மின் கம்பம் சாய்ந்து விழுவதற்குள் அதை மாற்றி அமைக்க மின்சார வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ரவீந்திரன், புதுப்பாளையம்.

சாக்கடை வடிகால் வேண்டும்
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள நல்லூர் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதி காந்திபுரம். இங்குள்ள ரேசன்கடை வீதியில் சாக்கடை வடிகால் வசதி கிடையாது. இதனால் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியேறி அங்கு குளம்போல் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே அந்த பகுதியில் சாக்கடை வடிகால் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், காந்திபுரம். 


விபத்தை ஏற்படுத்தும் கற்கள்
 அந்தியூர் பர்கூர் ரோட்டில் உள்ள பேரூராட்சி அலுவலகம் முன்பு ஏராளமான கற்கள் கிடக்கின்றன. இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் கற்களில் ஏறி, இறங்கி தடுமாறுகிறார்கள். சில நேரங்களில் விழுந்து விடுகிறார்கள். எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விபத்தை ஏற்படுத்தும் இந்த கற்களை அகற்ற ஆவன செய்ய வேண்டும்.
  செல்வம், அந்தியூர்.


சாலையை விரிவுபடுத்த வேண்டும்
சத்தியமங்கலம்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் கோழிப்பாளையத்தை அடுத்து ஒரு சாலை பிரிந்து தாளவாடிக்கு செல்கிறது. 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தாளவாடிக்கு இடையே கர்நாடக மாநிலத்துக்கு சொந்தமான சாலையும் செல்கிறது. இதில் தமிழ்நாட்டுக்கு சொந்தமான 5 கிலோ மீட்டர் சாலை மட்டும் ஒருவழி சாலையாக மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் அந்த வழியாக பஸ்கள் வரும்போது இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கூட விலக முடியாத நிலை உள்ளது. எனவே தாளவாடி செல்லும் சாலையை விரிவுபடுத்த நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், தாளவாடி.


நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்
கோபி சத்தி மெயின் ரோட்டில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகம் எதிரே உள்ள மின்சார பெட்டி திறந்து கிடந்தது. இதுபற்றிய செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பிரிவு பகுதியில் பிரசுரமாகி இருந்தது. இதையடுத்து மின்சார வாரிய அதிகாரிகள் அங்கு சென்று மின்சார பெட்டியை மூடி அதை பூட்டினர். இதுகுறித்து செய்தி வெளியிட்டு உதவிய ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த மின்சார வாரிய அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். 
பொதுமக்கள், கோபி.


ரோட்டில் தேங்கும் கழிவுநீர்
சத்தியமங்கலத்தில் இருந்து கொண்டப்பநாயக்கன்பாளையம் செல்லும் ரோட்டில் வி.என்.எஸ் நகர் உள்ளது. கொமராபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட இந்த பகுதியில் சாக்கடை வடிகால் வசதி அமைக்கப்படவில்லை. இதனால் சாக்கடை கழிவுநீர் வழிந்தோடி அங்குள்ள ரோட்டில் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக சாக்கடை கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மேலும் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. எனவே அங்கு சாக்கடை வடிகால் வசதி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், வி.என்.எஸ். நகர்.


பாராட்டு
கோபி கலிங்கியம் ேராட்டில் நகராட்சி குடிநீர் குழாய் வால்வில் இருந்து தண்ணீர் வெளியேறி குளம் போல் தேங்கி நின்றது. இதுகுறித்த ெசய்தி ‘தினத்தந்தி’  புகார் பெட்டி  பகுதியில் பிரசுரமாகி இருந்தது. இதைத்தொடர்ந்து நகராட்சி பணியாளர்கள் குடிநீர் குழாயில் உள்ள வால்வை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் தண்ணீர் வீணாக வெளியேறியது தடுக்கப்பட்டது. இதுபற்றி செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும், நகராட்சி  பணியாளர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம். 
பொதுமக்கள், கோபி.


Next Story