சென்னிமலை அருகே நெல் கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் பாதிப்பு
சென்னிமலை அருகே நெல் கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனா்.
சென்னிமலை
சென்னிமலை அருகே கே.ஜி.வலசு பகுதியில் தமிழக அரசின் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. இதனை வேறு பகுதிக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் மீண்டும் கே.ஜி.வலசு பகுதியிலேயே நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. நெல் கொள்முதல் நிலையங்களில் தங்களது நெல்லை விற்பனை செய்யும் விவசாயிகள் ஆன்லைனில் முன்பதிவு செய்த பிறகே கொள்முதல் நிலையத்துக்கு நெல் மூட்டைகளை கொண்டு வரவேண்டும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி சென்னிமலை அருகே உள்ள கே.ஜி.வலசு பகுதியில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக கடந்த 3 தினங்களுக்கு முன்பு விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை முன்கூட்டியே ஆன்லைன் பதிவு செய்த பிறகு கொண்டு வந்தனர். ஆனால் அங்கு இதுவரை அதிகாரிகள் வந்து நெல்லை வாங்குவதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்காததால் விவசாயிகள் அங்குள்ள களத்தில் தங்களது நெல் மணிகளை கொட்டி வைத்துள்ளனர். இதுவரை 75-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கே.ஜி. வலசு நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக கொட்டப்பட்டு கிடக்கிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ‘நாங்கள் கொண்டுவந்த நெல்லை அதிகாரிகள் இதுவரை வாங்காமல் இருப்பதால் எங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் உடனடியாக கே.ஜி.வலசு நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனையை தொடங்க வேண்டும்’ என்றனர்.
Related Tags :
Next Story