கீழ்க்கட்டளையில் வயதான தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை - கவனிக்க ஆள் இல்லாததால் பரிதாபம்


கீழ்க்கட்டளையில் வயதான தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை - கவனிக்க ஆள் இல்லாததால் பரிதாபம்
x
தினத்தந்தி 19 Feb 2022 2:47 PM IST (Updated: 19 Feb 2022 2:47 PM IST)
t-max-icont-min-icon

கவனிக்க ஆள் இல்லாததால் வயதான தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை கீழ்கட்டளையில் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த கீழ்க்கட்டளை டாக்டர் ராமமூர்த்தி நகர் 2-வது பிரதான சாலையை சேர்ந்தவர் நம்பிராஜன் (வயது 76). இவர், பிரபல சிமெண்டு நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருடைய மனைவி பாப்பா (75). இவர் ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது.

தற்போது நம்பிராஜன் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், அவருடைய மனைவி பாப்பா, நுரையீரல் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் வயதான காலத்தில் தங்கள் இருவரையும் கவனிக்க ஆள் இல்லாமல் தனிமையில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் நம்பிராஜனை, அவருடைய சகோதரர் சுப்பிரமணி நேற்று முன்தினம் மதியம் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். ஆனால் நீண்ட நேரமாக முயற்சி செய்தும் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சுப்பிரமணி, நேற்று முன்தினம் இரவு நம்பிராஜன் வீட்டுக்கு சென்று பார்த்தார். வீட்டின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்ததால் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார். அப்போது வீட்டின் வரவேற்பறையில் நம்பிராஜனும், வீட்டின் படுக்கை அறையில் அவருடைய மனைவி பாப்பாவும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த மடிப்பாக்கம் போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கிய கணவன்-மனைவி இருவரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story