ஓட்டுக்கு ரூ.1,000... வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு 10 ரூபாய் டோக்கன் கொடுத்த 4 பெண்கள்
சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரில் ஓட்டுக்கு ரூ.1,000 பெற்றுக்கொள்ளும்படி வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு 10 ரூபாய் டோக்கன் கொடுத்த 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆலந்தூர்,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று(சனிக்கிழமை) நடைபெறுகிறது. வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். எனினும் வேட்பாளர்கள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கி வருவதாக தெரிகிறது.
சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகர் எழில்நகரில் 4 பெண்கள் வீடு வீடாக சென்று, சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டு போடும்படி கூறி 10 ரூபாய் நோட்டை வழங்கியதாக கூறப்படுகிறது.
வாக்காளர்கள் தேர்தலில் வாக்களித்து விட்டு வந்து, அந்த 10 ரூபாய் நோட்டை கொடுத்தால் ஒரு ஓட்டுக்கு ரூ.1,000 பெற்று கொள்ளலாம் என அந்த பெண்கள் வாக்குறுதி அளித்ததாகவும் தெரிகிறது. தி.மு.க.வினர் 4 பெண்களையும் மடக்கி பிடித்து கண்ணகி நகர் போலீசில் ஒப்படைத்தனர்.
இதுபற்றி தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின்பேரில் கண்ணகிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த மணிமாலா (வயது 55), வனிதா (40), அஞ்சுமா (36), கீதா (43) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 830 எண்ணிக்கையிலான 10 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் கைதான 4 பெண்களும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story