வாக்குப்பதிவு எந்திரம் மாற்றப்பட்டதாக வேட்பாளர்கள் புகார்
வாக்குப்பதிவு எந்திரம் மாற்றப்பட்டதாக வேட்பாளர்கள் புகார் தெரிவித்து போராட்டம் நடத்தினர். புதிய எந்திரம் மாற்றிய பின்னர் சுமார் 1 மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.
வேலூர்
வாக்குப்பதிவு எந்திரம் மாற்றப்பட்டதாக வேட்பாளர்கள் புகார் தெரிவித்து போராட்டம் நடத்தினர். புதிய எந்திரம் மாற்றிய பின்னர் சுமார் 1 மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.
போராட்டம்
வேலூர் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தேர்தலை முன்னிட்டு ஏற்கனவே எந்தெந்த வாக்குச்சாவடிக்கு எந்த வாக்குப்பதிவு எந்திரம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்கள் வேட்பாளர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 58-வது வார்டு அரியூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் பலர் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
அப்போது சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வாக்களிக்கச் சென்றார். அவர் வாக்குச்சாவடிக்கு சரியான முறையில் எந்திரம் ஒதுக்கப்பட்டுள்ளதா? என்பதை கையில் வைத்திருந்த பட்டியலில் சரிபார்த்தார்.
அப்போது அந்த வாக்குச்சாவடியில் வேறு எண் கொண்ட எந்திரம் வைக்கப்பட்டிருந்தது. இதை கண்டதும் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி தேர்தல் அதிகாரியிடம் அவர் விளக்கம் கேட்டார். தகவல் அறிந்த மற்ற வேட்பாளர்களும், கட்சியினரும் அங்கு திரண்டனர். திட்டமிட்டு வாக்குப்பதிவு எந்திரம் மாற்றப்பட்டுள்ளது. சதி நடந்துள்ளது என்று கூறி வேட்பாளர்கள் வாக்குச்சாவடியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
எந்திரம் மாற்றம்
சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்கள் ஓட்டு போட அங்கேயே காத்திருந்திருந்தனர். அதேவேளையில் அதிகாரிகளுக்கும், கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அங்கு வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். வாக்குப்பதிவு எந்திரம் எப்படி மாறியது என்பது குறித்து வேட்பாளர்கள், அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த கலெக்டர் குமாரவேல்பாண்டியன் அங்கு வந்தார். அவரிடம், அதிகாரிகள் கூறுகையில், வேட்பாளர்கள் பெயர், சின்னம் ஒட்டும் போது ஒதுக்கப்பட்டிருந்த எந்திரம் பழுதானதால் அதற்கு மாற்றாக வேறு எந்திரம் புதிதாக மாற்றப்பட்டது.
இந்த எந்திரம் மாற்றப்பட்டதை அறியாமல் ஏற்கனவே வெளியிடப்பட்ட பட்டியலை இங்குள்ள வேட்பாளர் கையில் வைத்துள்ளார். அதனால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. இதுபற்றி அனைத்து வேட்பாளர்களிடம் முறையாக கையெழுத்து வாங்கி உள்ளது என்றார்.
சீல் வைப்பு
அப்போது வேட்பாளர்கள் கூறுகையில், கையெழுத்து வாங்கும்போது எந்திரம் மாற்றம் குறித்து தெரிவிக்காமல் கையெழுத்து வாங்கி விட்டீர்கள். எனவே இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றனர்.
பிரச்சினை தொடர்ந்து ஏற்படவே, இதனை தொடர்ந்து ஏற்கனவே வைத்திருந்த எந்திரத்தை மூடி சீல் வைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
அந்த எந்திரத்தில் 127 வாக்குகள் பதிவாகி இருந்தது. அப்படியே அந்த எந்திரத்தை மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் மூடி சீல் வைத்தார்.
தொடர்ந்து புதிய வாக்குப்பதிவு எந்திரம் வரவழைக்கப்பட்டு பொருத்தப்பட்ட பின்னர் வாக்குப்பதிவு தொடங்கியது.
வாக்கு எண்ணிக்கையின் போது 2 எந்திரங்களிலும் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story