மந்த நிலையில் காணப்பட்ட வாக்குப்பதிவு
மந்த நிலையில் காணப்பட்ட வாக்குப்பதிவு
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் வாக்குப்பதிவு நேற்று மந்தநிலையில் காணப்பட்டது. வாக்குச்சாவடி விவரம் தெரியாமல் வாக்காளர்கள் சிரமம் அடைந்தனர்.
வாக்குப்பதிவு தொடங்கியது
திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகளில் 494 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 776 வாக்குச்சாவடிகளில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. காலை 6 மணிக்கு வாக்குச்சாவடிகளில் வேட்பாளர்களின் முகவர்கள் வந்தனர். அவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் செய்யப்பட்டு மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. பின்னர் முகவர்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டு வாக்குப்பதிவுக்கு தயார் செய்யப்பட்டது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வந்ததும், உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தனர். பின்னர் கையுறை வழங்கப்பட்டது. வாக்குச்சாவடிநிலை அலுவலர்கள் வாக்காளர்களின் விவரம், பாகம் எண், வரிசை எண், வாக்குச்சாவடி எண் ஆகியவற்றை குறிப்பிட்டு கொடுத்தனர். வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு முன் வரிசையில் நின்று வாக்களித்தனர். வெயில் அதிகமாக இருந்ததால் வயதானவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டால் அவர்களுக்கு வழங்கும் வகையில் ஓ.ஆர்.எஸ்.கரைசலை தயாராக மருத்துவ குழுவினர் வைத்திருந்தனர்.
ஆர்வமுடன் வந்த வாக்காளர்கள்
நேற்று காலை முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். வெயிலுக்கு முன்பாக வந்து வாக்களிக்க வேண்டும் என்று நினைத்து வயதானவர்கள், பெண்கள் காலை 7 மணி முதல் வந்து தங்களின் வாக்கை பதிவு செய்தனர். குறிப்பாக பெண்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
குமார் நகர் இன்பன்ட் ஜீசஸ் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் பெண்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.அதுபோல் பட்டுக்கோட்டையார் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டன.
சக்கர நாற்காலியில் வந்த மூதாட்டி
வயதானவர்கள் வாக்களிக்க வசதியாக வாக்குச்சாவடிகளுக்கு முன் சக்கர நாற்காலிகள் தயார் நிலையில் இருந்தன. வயதானவர்கள் வந்ததும் சக்கர நாற்காலியில் அமர வைத்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு அழைத்துச்சென்று வாக்களிக்க வைத்தனர். அரண்மனைப்புதூர் பள்ளியில் 95 வயது மூதாட்டி சக்கர நாற்காலியில் சென்று வாக்களித்தார். இதுபோல் பெரிச்சிப்பாளையம் பள்ளியில் மாற்றுத்திறனாளி இளைஞர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தார்.
திருப்பூர் நொய்யல் வீதியில் உள்ள வாக்குச்சாவடியில் வேட்பாளர்களின் முகவர்கள் அதிகம் இருப்பதாக கூறி கட்சியினருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
வாக்குப்பதிவு மந்தம்
திருப்பூர் மாநகராட்சியில் 7 லட்சத்து 23 ஆயிரத்து 160 வாக்காளர்கள் உள்ளனர். 2 மணி நேரத்துக்கு ஒருமுறை வாக்குப்பதிவு விவரம் அறிவிக்கப்பட்டன. காலை 9 மணி நிலவரப்படி 7.76 சதவீதம் வாக்குகள் பதிவானது. 11 மணி நிலவரப்படி 16.01 வாக்குகள் பதிவாகியிருந்தன. அதன்பிறகு வாக்களிக்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மதியம் 1 மணி நிலவரப்படி மாநகராட்சியில் 27.81 சதவீதம் வாக்குகள் பதிவானது. நகராட்சிகள், பேரூராட்சிகளை விட மாநகராட்சி பகுதியில் வாக்குப்பதிவு நேற்று குறைவாகவே காணப்பட்டது. மதியம் 3 மணி நிலவரப்படி மாநகராட்சியில் 39.34 சதவீதம் பேர் வாக்களித்திருந்தனர். தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்றது.
மாநகராட்சியை பொறுத்தவரை வாக்குப்பதிவு மந்தமாகவே காணப்பட்டது. வார்டு மறுசீரமைப்பு காரணமாக பல வார்டுகளின் எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டன. இதனால் வாக்குச்சாவடிகளும் மாறின. வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி விவரம் தெரியும் வகையில் பூத் சிலிப் வினியோகம் முழுமையாக நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. இதன்காரணமாகவும் வாக்குப்பதிவு மந்தநிலையை எட்டியதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினார்கள்.
---------------
Related Tags :
Next Story