நாட்டு வைத்தியர் மீது பொய் புகார் அளித்துள்ளதாக - கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
நாட்டு வைத்தியர் மீது பொய் புகார் அளித்துள்ளதாக கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள செம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகள்கள் மகேஸ்வரி (வயது 24), ஹேமமாலினி (20). இவர்களில் ஹேமமாலினி திருவள்ளூர் அருகே தொழுவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ம் ஆண்டு படித்து வந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்ட ஹேமமாலினி திருவள்ளூரை அடுத்த வெள்ளாத்து கோட்டையில் உள்ள நாட்டு வைத்தியர் முனுசாமி என்பவரது ஆசிரமத்தில் தங்கி சிகிச்சை பெற்றார். அங்கு பூச்சி மருந்து குடித்த ஹேமமாலினி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மாணவியின் பெற்றோர் பென்னலூர்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஹேமமாலினியின் தந்தை ராமகிருஷ்ணன், தாயார் நிர்மலா மற்றும் உறவினர்கள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
ஹேமமாலினியின் தாயார் நிர்மலா, தனனுடைய மகளின் சாவுக்கு காரணமான நாட்டு வைத்தியர் முனுசாமி, அவரது மனைவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார்.
இந்த நிலையில் நேற்று முனுசாமி மீது பொய் புகார் அளித்ததாக திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெள்ளாத்துக்கோட்டை நாட்டு வைத்தியரிடம் சிகிச்சை பெற்று குணமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் அளித்தனர். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story