கோவை தனியார் திருமண மண்டபத்தில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ததாக கூறி பாஜனதா, அதிமுக வேட்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்


கோவை தனியார் திருமண மண்டபத்தில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ததாக கூறி பாஜனதா, அதிமுக வேட்பாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர்
x
தினத்தந்தி 19 Feb 2022 7:09 PM IST (Updated: 19 Feb 2022 7:09 PM IST)
t-max-icont-min-icon

கோவை தனியார் திருமண மண்டபத்தில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ததாக கூறி பாஜனதா, அதிமுக வேட்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்


கோவை

கோவை தனியார் திருமண மண்டபத்தில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ததாக கூறி பா.ஜனதா, அ.தி.மு.க. வேட்பாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாக்குப்பதிவு

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க வாக்குச்சாவடி மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

கோவை மாநகராட்சி 63-வது வார்டு ஒலம்பஸ் 80 அடி ரோடு மாநகராட்சி தொடக்க பள்ளியில் காலை 10 மணி அளவில் வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டு இருந்தது.

அப்போது அங்கிருந்து சிறிது தூரம் தள்ளி ஒரு தனியார் திருமண மண்டபத்தில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்யப்படு வதாக தகவல் பரவியது. உடனே அ.தி.மு.க., பா.ஜனதா, மக்கள் நீதி மய்யம் உள்பட கட்சி வேட்பாளர்கள் அங்கு திரண்டனர். 

மண்டபத்தை பூட்டினர்

அவர்கள் திடீரென்று அந்த மண்டபத்திற்கு பூட்டு போட்டனர். இதனால் மண்டபத்திற்குள் இருந்த வாக்காளர்கள் பலர் வெளியே வர முடியாமல் தவித்தனர். 

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட வேட்பாளர்களை சமாதானப்படுத்தினர். 

இதையடுத்து அந்த திருமண மண்டபத்தின் பின்பக்க கதவை போலீசார் திறந்து விட்டனர். உடனே மண்டபத்துக்குள் இருந்த வாக்காளர்கள் வெளியே சென்றனர். 

இதனால் அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க., பா.ஜனதா வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் வாக்குப் பதிவு நடைபெற்ற பள்ளியின் முன் திரண்டு தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

உடனே தேர்தல் அலுவலர் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.

தி.மு.க.- அ.தி.மு.க. மோதல்

கோவை மாநகராட்சி 26-வது வார்டு பீளமேடு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் வாக்களிக்க வாக்காளர்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அங்கு வந்த சிலர் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ததாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. உடனே போலீசார் இரு தரப்பினரையும் சமாதா னப்படுத்த முயன்றனர். 

ஆனால் அவர்கள் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அங்கிருந்த 5 பேரை பிடித்து சென்றனர். 
வீடு முற்றுகை

இது போல் பீளமேட்டில் உள்ள மற்றொரு வாக்குச்சாவடியில் சிலர் தங்களது கட்சி வேட்பாளரின் வரிசை எண்ணை கூறி வாக்களிக்கு மாறு வாக்காளர்களிடம் கூறினர். 

இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே அங்கிருந்தவர்களை போலீசார் வெளியேற்றினர்.

மாநகராட்சி 92-வது வார்டு குனியமுத்தூர் இடையர்பாளையத்தில் ஒரு வீட்டில் வைத்து சிலர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக தெரிகிறது. 

இதனால் ஆத்திரம் அடைந்த அ.தி.மு.க.வினர் அந்த வீட்டை முற்றுகையிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.


Next Story