படுத்த படுக்கையாக இருந்த போதிலும் ஆம்புலன்சில் வந்து வாக்களித்த மூதாட்டி
திண்டுக்கல்லில், படுத்த படுக்கையாக இருந்த போதிலும் ஆம்புலன்சில் வந்து மூதாட்டி வாக்களித்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக வரும் மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ஆகியோர் வாக்குச்சாவடிகளுக்குள் எளிதாக சென்று வாக்களிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நடக்க முடியாத வாக்காளர்களை வாக்குச்சாவடிக்குள் அழைத்து செல்வதற்காக சக்கர நாற்காலிகள் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. நடக்க முடியாமல் தள்ளாடியபடியே வாக்குச்சாவடிகளுக்கு வந்த முதியவர்களை அந்த சக்கர நாற்காலிகளில் அமர வைத்து வாக்குப்பதிவு நடக்கும் இடத்துக்கு தேர்தல் அலுவலர்கள் அழைத்துச்சென்று வாக்களிக்க வைத்தனர்.
இந்த நிலையில் திண்டுக்கல் திருமலைசாமிபுரத்தை சேர்ந்தவர் அம்சா (வயது 66). இவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையான இவர், வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆம்புலன்சில் வந்த மூதாட்டி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக அந்த மூதாட்டி, 31-வது வார்டில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு ஆம்புலன்சில் வந்தார். பின்னர் ‘ஸ்டெச்சர்’ மூலம் அவரை வாக்குப்பதிவு நடக்கும் இடத்துக்கு தேர்தல் அலுவலர்கள் கொண்டு சென்றனர். அதையடுத்து அந்த மூதாட்டி தெரிவித்த சின்னத்தில் தேர்தல் அலுவலர்கள் வாக்களித்தனர்.
இதேபோல் திண்டுக்கல் மேற்கு கோவிந்தாபுரத்தை சேர்ந்த தனம்மாள் என்ற 102 வயது மூதாட்டி, காந்திஜி நினைவு நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு ஆட்டோவில் வந்து வாக்களித்தார். பின்னர் அவர் கூறுகையில், நான் கடந்த 1919-ம் ஆண்டு பிறந்தேன். தற்போது எனக்கு 102 வயது ஆகிறது. எனக்கு ஆதரவளிக்க குடும்பத்தினர் யாரும் இல்லை. வாக்களிப்பது நமது கடமை. அதனால் தான் இந்த தள்ளாத வயதிலும் எனது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வந்து வாக்களித்தேன் என்றார். இவரை போல மாநகராட்சி வார்டு பகுதிகளில் ஏராளமான முதியவர்கள், மூதாட்டிகள் தள்ளாத வயதிலும் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
Related Tags :
Next Story