பழையாறு மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை


பழையாறு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள்.
x
பழையாறு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள்.
தினத்தந்தி 19 Feb 2022 9:59 PM IST (Updated: 19 Feb 2022 9:59 PM IST)
t-max-icont-min-icon

டீசல் விலை உயர்வை கண்டித்து பழையாறு மீனவர்கள் நேற்று 3-வது நாளாக கடலுக்கு மின்பிடிக்க செல்லவில்லை. ரூ.3½ கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

கொள்ளிடம்:-

டீசல் விலை உயர்வை கண்டித்து பழையாறு மீனவர்கள் நேற்று 3-வது நாளாக கடலுக்கு மின்பிடிக்க செல்லவில்லை. ரூ.3½ கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. 

டீசல் விலை உயர்வு

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தினந்தோறும் 350 விசைப்படகுகளிலும், 300 பைபர் படகுகளிலும், 250 நாட்டுப்படகுகளிலும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்கிறார்கள். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் மூலம் பழையாறு துறைமுகத்தில் இயங்கி வரும் பங்கில் மானிய விலையில் மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் டீசல் விலை, தனியார் பங்கைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 
இதனை கண்டிக்கும் வகையில் பழையாறு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதன் காரணமாக நேற்று 3-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. 
இந்த நிலையில் நேற்று பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் விசைப்படகு உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் முன்னேற்ற சங்க தலைவர் மதுரைவீரன் தலைமை தாங்கினார். மீனவ பிரதிநிதிகள் சுதர்மன், மணிவாசகம், செல்வம், நக்கீரன் உள்ளிட்ட விசைப்படகு உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். 

வர்த்தகம் பாதிப்பு

கூட்டத்தின்போது தமிழக முதல்-அமைச்சர் உடனடியாக டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும், டீசல் விலை உயர்வை குறைக்கும் வரை தொடர்ந்து மீன்பிடிக்க செல்வதை புறக்கணிக்கப் போவதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர். 3 நாட்களாக மீன்பிடிக்க செல்லாததால் ரூ.3 கோடியே 50 லட்சத்துக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

Next Story