ஓட்டு போட அனுமதிக்காததால் வாக்காளர்கள் திடீர் சாலை மறியல்


ஓட்டு போட அனுமதிக்காததால் வாக்காளர்கள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 19 Feb 2022 10:01 PM IST (Updated: 19 Feb 2022 10:01 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் மாலை 5 மணிக்கு பிறகு ஓட்டு போட அனுமதிக்காததால் வாக்காளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் மாலை 5 மணிக்கு பிறகு ஓட்டு போட அனுமதிக்காததால் வாக்காளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

வாக்குச்சாவடி மாற்றம்

பொள்ளாச்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு  காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதற்கிடையில் ராஜாமில் ரோட்டில் உள்ள புனித லூர்து மாதா பள்ளி வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பழுதானதால், 45 நிமிடங்கள் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. இதன் காரணமாக மாலை 5.45 மணி வரை வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் மறுவரையறை செய்யப்பட்டு வார்டுகள் பிரிக்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாக சில வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி மாறியது. 


அலைக்கழிப்பு

இதனால் வாக்குச்சாவடி தெரியாமல் சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த வாக்குச்சாவடிக்கு வந்தனர். அங்கு உள்ள அலுவலர்களிடம் வாக்காளர் அடையாள அட்டையை கொடுத்து பெயர் உள்ளதா? என்று கேட்டனர். ஆய்வு செய்த அலுவலர்கள் நீங்கள் இங்கு வாக்களிக்க முடியாது, உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு செல்லுமாறு கூறினர். இதனால் வாக்காளர்கள் வாக்குச்சாவடி தெரியாமல் அங்மிங்கும் அலைக்கழிக்கப்பட்டனர். 

இதற்கிடையில் மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. பின்னர் 1 மணி நேரம் கொரோனா தொற்று பாதித்தவர்கள், அறிகுறி உள்ளவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 

சாலை மறியல்

நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு சிலர் மாலை 5 மணிக்கு பிறகு வந்தனர். அங்கு பணியில் இருந்த போலீசார் வாக்குப்பதிவு நேரம் முடிந்து விட்டதால் அனுமதிக்க முடியாது என்று நுழைவு வாயிலை மூடினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டூர் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

பின்னர் சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் வந்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். பொள்ளாச்சி நகராட்சி, கிணத்துக்கடவு பேரூராட்சியில் கொரோனா பாதித்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் யாரும் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story