வாக்குச்சாவடியை அரசியல் கட்சியினர் முற்றுகை
வாக்குச்சாவடியை அரசியல் கட்சியினர் முற்றுகை
மயிலாடுதுறை:-
மயிலாடுதுறை சின்ன எரகலித்தெரு நகராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் பெண்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பழுது அடைந்ததால், புதிய எந்திரத்தை பயன்படுத்தி வாக்குப்பதிவு நடந்தது. இதன் காரணமாக 2 மணிநேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அந்த வாக்குச்சாவடியில் 5 மணிக்கு மேல் வாக்களிக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. 5 மணிக்கு மேல் 6 மணி வரை கொரோனா நோயாளிகள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அந்த வாக்குச்சாவடியில் 5 மணிக்கு மேல் வந்த வாக்காளர்களை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் எனக்கூறி அரசியல் கட்சியினர் வாக்குச்சாவடியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் பெண்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மட்டும் தான் பழுதடைந்தது என்பதால், அங்கு கூடியிருந்த பெண்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆண்கள் யாரையும் வாக்களிக்க அனுமதிக்கவில்லை. இதேபோல 20-வது வார்டு கொத்தத்தெரு நகராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் தாமதமாக வந்த வாக்காளர்களை அரசியல் கட்சியினர் வாக்களிக்க கேட்டுக்கொண்டனர். ஆனால் தேர்தல் அலுவலர்களும், போலீசாரும் தாமதமாக வந்தவர்களை வாக்களிக்க அனுமதிக்க முடியாது எனக்கூறி அங்கிருந்து அனைவரையும் அப்புறப்படுத்தினர். இதேபோல கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் பிரச்சினை எழுந்தது. அங்கேயும் போலீசார் தாமதமாக ஓட்டுப்போட வந்தவர்களை அப்புறப்படுத்தினர்.
Related Tags :
Next Story